முத்தரையர் கல்வெட்டு
Jul 02, 2022
விருதுநகர் கல்விமடை கல்வெட்டு
#கேரளசிங்க_முத்தரையர்
--------------------------------------
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்விமடை எனும் சிற்றூரில் உள்ளது திருப்பாலையூர் உடையார் கோவில். முற்காலப் பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர் கால கல்வெட்டுகள் நிரம்பியிருக்கும் இக்கோவில் கல்வெட்டுகளில் திருப்பாலையூர் என்றும் இறைவன் திருப்பாலையூர் உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சாலைக்கிராமத்து சோழன் தலை கொண்ட வீர பாண்டியனின் கல்வெட்டு மன்னன் திருப்பாலையூரில் இருந்து நிவந்தங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
திருப்பாலையூர் கோவிலருகே காணப்படும் பலகையின் ஒருபுறத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கிரந்தம் மற்றும் வட்டெழுத்து எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு முற்காலப் பாண்டிய மன்னன் சடையமாறனின் இரண்டின் எதிர் ஆண்டினைச் சேர்ந்தது.
தமிழ்ப்பகுதி
"கோச்சடை
ய மாறற்கு யாண்டு 2 இதனெதிரா
மாண்டு (சா)ழ நாட்டு தேவதாந திரு
ப்பாலைஊர் ஈஸ்வர படாரர்க்கு பருத்
திக்குடி நாட்டு மேன்முக்குள
த்து கேரள சிங்க முத்தரையனா
யின மாதேவன் மருதன் திருநொ
ந்தா விளக்கு ஒன்றெரிய அ
டுத்த பசு 25 இவைச்சி
னால் நியதம் உழக்கு நெய்
முட்டாமைய் அட்டுவான் கொண்
டகுடி அம்மானப்பி கொண்
ட பசு 5 கொற்றனட்டி கொண்ட ப
சு 10 சங்கரங் குளவன் கொண்ட
பசு 5 சங்கரம் பெற்றான் கொண்ட
பசு 5 ஆகை பசு 25"
பருத்திக்குடி நாட்டிலிருந்த #கேரளசிங்க_முத்தரையன் னான மாதேவன் மருதன் என்பார் திருப்பாலையூர் படாரர்க்கு ஒரு நந்தா விளக்கிற்காக 25 பசுக்களை வழங்கியுள்ளார். இப்பசுக்கள் பிரித்து கொண்டக்குடி அம்மானப்பி என்பவருக்கு ஐந்தும் கொற்றனட்டி என்பவருக்கு பத்தும் சங்கரங்குளவன் என்பவருக்கு ஐந்தும் சங்கரன் பெற்றான் என்பவருக்கு ஐந்தும் வழங்கப்பட்டது. இவர்கள் தடையில்லாமல் விளக்கு எரிப்பதற்காக நெய் வழங்க வேண்டும். வடமொழியில் தானமளித்தவரின் ஊர்ப்பெயர் வர்த்தகிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
--------------------------------------------