சப்தகன்னியர்
02 Apr, 2025
தொடர்ந்து படிக்கJul 30, 2022
இன்று செஸ் ஒலிப்பியாட் போட்டிகளைத் துவக்கி வைத்த பிரதமர் மோதி தனது உரையில் திருப்பூவனூர் சதுரங்கவல்லப நாதர் திருக்கோயில் பற்றிக் குறிப்பிட்டார். பூவனூர் எங்கே இருக்கிறது? சதுரங்கம் ஆடிய ஈஸ்வரன் யார்? இங்கே பார்ப்போம்.
பார்வதி தேவி வசுசேனன் என்ற மன்னனுக்கு மகளாக இப்புவியில் அவதரித்தார். சகல கலையிலும் பாண்டித்யம் மிக்கவளாகத் திகழ்ந்த அம்பிகை சதுரங்க விளையாட்டில் யாராலும் வெல்லமுடியாதவளாக இருந்தாள். உடனே மன்னன் சதுரங்கப் போட்டியில் வெல்பவனுக்கு தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தான். எவராலும் அம்பிகையை வெல்ல முடியவில்லை.
சிவபெருமான் சித்தர் வேடம் பூண்டு அங்கு வந்தார். அம்பிகையுடன் சதுரங்கம் ஆடி ஜெயித்தார். சித்தருக்கு எப்படி தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பது என்று மன்னன் சிந்தனையில் ஆழ்ந்த போது சிவபெருமான் தனது சொரூபத்தைக் காட்டியருள, அவருக்கே தனது பெண்ணாகப் பிறந்த அம்பிகையைத் திருக்கல்யாணம் செய்துவைக்கிறான்.
இந்தத் தலம் மன்னார்குடி-நீடாமங்கலம் சாலையில், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. ஹரித்ராநதியில் சைக்கிளில் ஏறி மேலப்பாலம் தாண்டியதும் நாலு மிதியில் பூவனூர் வந்துவிடலாம். இருபுறமும் புளிய மரங்கள் நிழல் தர ரோடோரத்தில் பாமணி சலசலக்க ஓடி வரும். ஆற்றுப் பாலத்தைக் கடந்தால் ராஜகோபுர தரிசனம் கிட்டும். சுற்றிலும் பச்சை வயல்கள் சூழ்ந்த ரம்மியமானப் பிரதேசம். இறைவன் சதுரங்கவல்லபநாதர் சுயம்பு மூர்த்தி. மைசூருக்குப் பிறகு இறைவி இங்குதான் சாமூண்டீஸ்வரியாக தனி சன்னிதியில் கோயில் கொண்டிருக்கிறாள்.
எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் வேர் கட்டி நீராடி நலம் பெறுகிறார்கள்.
“பூவனூர் புகுவார் வினை போகுமே..” என்று அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
வினை தீர பூவனூர் சென்று சதுரங்கவல்லபநாதர் - சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம்.