|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Aug 22, 2022

முத்தரையர்

முத்தரையர்-நான் தமிழன்

குமுதம் இதழில் நான் தமிழன் என்ற தொடர் (தமிழர்களின் பழமை, பெருமை, பாரம்பரியம் பற்றியது) எழுத்தாளர் திரு. இரா. மணிகண்டன் அவர்களால் எழுதப்பட்டது அதில் 30.09.2009 ந் தேதி இட்ட இதழில் "முத்தரையர்" பற்றிய கட்டுரை.

போர்! பெரும்போர்! பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் கடும்போர். ஏறத்தாழ பல்லவ மன்னன் தோற்றுப்போகும் நிலை, பல்லவ நாட்டின் பெரும் நகரங்கள், கிராமங்கள், ஆறுகள், குளங்கள் என்று ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டே வந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பல்லவ மன்னன், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையரிடம் உதவி கேட்கிறான். நட்பு நாடி வந்தவருக்கு நம்பிக்கையுடன் பெரும்பிடுகு உறுதியளிக்கிறார் அதற்க்குப் பின் நடந்தது வரலாற்று உண்மைகள்.

பாண்டிய மன்னனை வென்று, சோழ மன்னனை வென்று தொடர்ந்து பல போரில் வெற்றிவாகை சூடினார் பெரும்பிடுகு முத்தரையர். சத்துருகேசரி, அபிமானதீரன், நெடுமாறன் உள்ளிட்ட 16 விருதுகள் அவர் பெற்ற வெற்றிக்காக சூட்டப்பட்டன!
முத்தரையர் சமுதாயத்தை காலம் காலமாக வரலாற்றில் இடம்பெறச் செய்த சரித்திர நிகழ்ச்சி இது
தமிழகத்து வரலாற்று கதாபாத்திரங்களில் முத்தரையர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். முத்தரையர்கள் தோற்றம் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே நிறைய கருத்து முரண்பாடுகள் உண்டு, ஆனால் தமிழகத்தின் கலை, இலக்கிய பண்பாட்டைக் கட்டிக் காத்தவர்கள் முத்தரையர்களே.
அவர்கள் பல்லவப் பேரரசுக்கு உட்பட்டு தஞ்சாவூர், பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இப்போது ஒரு சிற்றூராக காட்சியளிக்கும் செந்தலை என்பதுதான் அன்றைய முத்தரையர்களின் தலை நகரமாக செயல்பட்டு வந்தது, பாண்டியர்களோடும், சோழர்களோடும் பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத் துணை நின்று வெற்றிக்கு உதவியுள்ளனர்.
செந்தலை கல்வெட்டு ஆதரப்படி முதன் முதலாக (கி.பி 655) நமக்கு அறியவருவது பெரும்பிடுகு முத்தரையன் என்ற மன்னன்தான். இவருடைய மகன் இளங்கோவடியரையன் அவரது மகன்தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி 705- 745) இவரது காலத்தில்தான் முத்தரையர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். "பிடுகு" என்றால் "இடி" என்று பொருள்.
அவருக்குப் பிறகு அடுத்தடுத்து பலர் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர்களின் உற்ற தோழர்களாக அரசியலில் இருந்தாலும், அவர்களுக்குப் போட்டி போடும் வகையில் கலை பண்பாட்டில் விஞ்சி நின்றவர்கள் முத்தரையர்கள்.
ஆலம்பாக்கத்தில் உள்ள "மார்ப்பிடுகு ஏரி" திருவெள்ளாறையில் "மார்ப்பிடுகு பெருங்கிணறு" ஆகியவற்றை உருவாக்கி அப்பகுதி மக்களின் தாகத்தைத் தீர்த்தவர்கள்.
சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு முத்தரையர் பெரும் பங்காற்றியுள்ளனர். அதோடு சமண சமயத்திற்க்கும் பேராதரவு தந்திருக்கிறார்கள். முத்தரையர் காலத்தில் தான் " நாலடியார்" என்ற நூல் இயற்றப்பட்டிருக்கிறது.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அக்காலத்திலேயே முத்தரையர்கள் உதவி வந்திருக்கிறார்கள், பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தன், கோட்டாற்று இளம் பெருமானார் ஆகியோர் முத்தரையர்களின் அரசவையை அலங்கரித்த பெரும் புலவர்களில் சிலர்.
யாப்பருங் கலவிருத்தி என்ற நூலில் "முத்தரையர் கோவை" என்ற நூல் பற்றிய குறிப்பு வருகிறது. இது மட்டும் கிடைத்திருந்தால் முத்தரையர் பற்றிய முழுமையான வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும். பழியீசுவரம் குகைக்கோயில், திருமெய்யம் அருகில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவில், தேவர்மலை கற்றளி, மலையடிப்பட்டி வாகீஸ்வரர் குகைக்கோயில் ஆகியவை முத்தரையர்கள் செதுக்கி நமக்களித்த கொடையே.
"தஞ்சாவூர்" என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தை உருவாக்கியதே முத்தரையர்கள்தான். தனஞ்சயன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஊர் "தனஞ்சய ஊர்" என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் தஞ்சாவூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சுதந்திரப் போராட்டத்தில் முத்தரையர் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பலர் இணைந்து நாட்டிற்கு உழைத்திருக்கிறார்கள்.
எட்டரைக் கோப்பு ஆகிய கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வேள்வித் தீயில் உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம், பாதரப்பேட்டை முத்தையா, அண்ணாவி, அப்பர் முத்தரையர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
தற்கால அரசியல் வானிலும் முத்தரையர்களின் பங்கு அதிகம் பாதரப்பேட்டை முத்தையா முத்தரையர்களின் முதல் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், அண்ணாவி, புலவர் செங்குட்டுவன், கே.கே.பாலசுப்பிரமணியன், பேராவூரணி எம்.ஆர்.கோவேந்தன் (தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் முத்தரையர்), ஆலங்குடி வெங்கிடாசலம், இப்போதைய (கட்டூரை எழுதப்பட்டபோது..!) திமுக அரசில் வனத்துறை அமைச்சராக இருக்கும் என்.செல்வராஜ் உள்ளிட்ட பலரை தந்த சமூகம் இது. (தற்போதைய அதிமுக அரசில் சிறிது காலம் அமைச்சராக இருந்த திரு. பரஞ்சோதி, இன்றைய கல்வித் துறை அமைச்சர் திரு. என்.ஆர்.சிவபதி ஆகியோர் நம் மக்களுக்கு தெரிந்திருக்கும்)
நத்தம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பாக சட்டமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப் பட்ட ஆண்டி அம்பலம், தொட்டியம் முன்னாள் எம்.எல்.ஏ சிங்கார வேலு (!?), பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ குழ.செல்லையா, (இவர் தனியே முத்தரையர் சங்கம் நடத்தி வந்தார் சமீபத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்) தொட்டியம் ராஜசேகரன், முசிறி ராஜரெத்தினம், தொட்டியம் கண்ணையன், பிரின்ஸ் தங்கவேலு, புதுக்கோட்டை -ஆலங்குடி ராஜசேகரன் (இ.கம்யூ), மல்லிகா சின்னச்சாமி, புதுக்கோட்டை ராஜா பரமசிவம் (முன்னாள் எம்.பி) உள்ளிட்ட பலர் தி.மு.க, அதிமுக எம்.எல்.ஏ க்களாக முத்தரையர் சமூகத்திலிருந்து சட்டசபைக்குச் சென்று சாதனை படைத்திருக்கிறார்கள். ( இந்த கட்டூரையில் விடுபட்ட சிலர்... திரு. திருஞானசம்பந்தம் பேராவூரணி, திரு. புஷ்பராஜ் - ஆலங்குடி, திரு. ..... பேராவூரணி)
காமராஜர் ஆட்சியில் தலைமைச் செயலராக இருந்து திறம்பட நிர்வகித்த இ.பி.ராயப்பாவை தமிழகம் மறக்காது (இன்றைய முத்தரையர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது..!!??), விளையாட்டுத் துறையில் உயரம் தாண்டுவதில் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்தை தலை நிமிர வைத்த நல்லுச்சாமி அண்ணாவி, சர்வதேச கபடிப் போட்டியில் சாதித்த மணமேடு சுப்பிரமணியன் போன்றோர் முத்தரையர் தந்த கொடையே. ( இன்றைய நிலையை சிந்தித்துப் பார்ப்போமா ? உறவிகளே).
சிறந்த பேச்சாளரான திருச்சி செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் எழுத்துத் துறையில் முத்தரையர் சமூகத்திற்க்குப் பெருமை சேர்கின்றனர், முத்தரையர் சங்கத் தலைவர் ஆர்.விஸ்வநாதன், நடிகர் பரதன் உள்ளிட்ட பலர் முத்தரையர் சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்.
முத்தரையர்களிடையே திருமணச் சடங்குகள் நிறைய உண்டு எனினும் எளிமையான திருமணத்தையே மேற்கொள்கின்றனர். மணமகனுக்கு காதுக்குத்தியிருக்க வேண்டும், மணமகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும், என்பதுதான் மணமக்களுக்கு தகுதி மற்றப்படி பரிசம் போடும்போது மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு நகை போட வேண்டும், திருமணத்தின் போது மணமக்களுக்கு தோஷம் கழிய நூல் பிடி சடங்கு செய்வது அதிகம், திருமணத்திற்க்கு அழைப்பிதழோடு "பணம் வைத்து அழைத்தல்" என்ற முறை முத்தரையர் சமூகத்திலும் உண்டு.
வரலாற்றுக் காலம் முதல் அறியப்படும் முத்தரையர்கள் இன்றைக்கும் பல்வேறு துறைகளில் வரலாறுகளைப் படைத்தவண்ணம் உள்ளனர்.
இந்த கட்டூரையில் பல செய்திகள் விடுபட்டிருந்தாலும் பல்வேறு கோணங்களில் தகவல்களை திரட்டி இந்த கட்டூரையின் மூலம் மறக்கப்பட்டு வரும் முத்தரையர்களின் கலை, பண்பாடு, பழக்கவழக்கங்களை முத்தரையர்களுக்கும், ஏனைய தமிழ் சமூகத்திற்க்கும் சொந்த விருப்பு விருப்பு இன்றி தொகுத்து அளித்த திரு. இரா.மணிகண்டன் அவர்களுக்கும், இந்த கட்டூரையினை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எங்களின் சுருங்கிய வரலாற்றினை தெரிந்துக் கொள்ள செய்த "குமுதம்" இதழுக்கும் முத்தரையர் சமூகத்தின் சார்பில் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
Posted 21st October 2016 by முத்தரையர்
 
0 Add a comment
OCT
21
கரிகால சோழ சூரிய முத்தரையர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயா சமுத்திரம் என்னும் ஊரிலிருந்து திருமலைநம்பி என்பவர் எழுதிய கடிதத்தில்தான் அவ்வருமையான செய்தி இருந்தது. அவர் தாம் கண்ட ஒரு செப்பேடடில் "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற வாசகம் உள்ளது என்றும், அச்செப்பேடு திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டியில் உள்ள பிச்சன் என்பவரிடம் என்றும் உள்ளது என்றும் எழுதியிருந்தார். "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற செய்தி தமிழ் வரலற்றுக்கு அருமையான செய்தி. முத்தரையர்கள் கரிகாலனோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதும், சூரியகுலத் தொடர்பு கொண்டவர் என்பதும் தெளிவாகிறது அல்லவா? சோழர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள் என முன்னே கண்டோம். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோமல்லவா? கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
இருவரும் ஒரு குடியினர்
இப்பொழுது பாருங்கள்! எங்கேயோ மைசூர்ப் பகுதியை 1300 வருஷங்களுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை முத்தரையர் என்றும், கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்றும் தமது செப்பேடுகளில் கூறிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ச் செப்பேட்டில் முத்தரையர் கரிகால சோழ குலத் தொடர்புடையவர் என்று குறிக்கிறார்கள் என்றால், எவ்வளவு அரிய சான்றுடன் கூடிய வரலாற்று ஒற்றுமை. இவ்வொற்றுமையின் அடிப்படையில் இருவரும் ஒரு குடியினரே என்று வரலாற்று வல்லுநர் கொள்வது தவறாகாதல்லவா! சோழராட்சியிலும், பின்னர் பாண்டியராட்சியிலும் கி.பி. 10ஆவது நூற்றாண்டு முதல் 14-15ஆவது நூற்றாண்டு வரை கங்கர்முத்தராசர் குடியினர் புதுக்கோட்டைப் பகுதியில் தானைத் தலைவர்களாகவும் வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைப் பகுதியில் இன்று வாழும் முத்தரையர் இவ்வழித் தொடர்புடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இத்தொடர்பை நமக்குச் சான்றுகளோடு எடுத்து இயம்புவை நமது செப்பேடுகள் அல்லவா! இன்னும் நமது கிராமங்களில் உள்ள செப்பேடுகளில் எவ்வளவு வரலாற்று உண்மைகள் உள்ளனவோ! இவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வருவோருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
முத்தரையர்
முத்தரையர் பற்றிய இரா.நாகசாமி அவர்களின் கட்டுரை முத்தரையர் ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
முத்தரையர் என்ற சொல் தொடர் இரண்டு சொற்களால் ஆனது. திருமய்யம் கல்வெட்டு முத்தரையத் தலைவன் ஒருவனை "அரைசன்" என்று குறிக்கிறது. குன்னாண்டார் கோயில் கல்வெட்டில் பல்லவ நந்திவர்மன் காலத்தில் முத்தரையரின் பணியாளன் ஒருவன் "அரையர்கள் அடியான் வாலிவடுகன் ஆன கலிமூர்க்க இளவரையன்" என அழைக்கப்படுகின்றான். திருநெய்த்தானக் கல்வெட்டிலும் இவன் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளான்.
தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான்

என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர், கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம். எனவே முத்தரையர் என்பதிலும் ஈற்றில் உள்ள சொல் அரையர் என்பதில் ஐயமில்லை.
சிலர் முதற் சொல்லை மூன்று என்று கொள்கின்றனர். தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = முவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். முத்து + அரையர் எனவும் வருவதற்கு இல்லை. இவர்கட்கும் முத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆகவே முதற்சொல்லை முது அல்லது மூத்த என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியாமலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுக்கள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்.
முத்தரையர் கர்நாடகத் தொடர்புடையவர்களே, பகாப்பிடுகு முத்தரையன், பெரும்பிடுகு முத்தரையன் என்று முத்தரையர் பெயர்களில் காணப்படும். பிடுகு என்ற சொல் இடி என்னும் பொருளுடைய கன்னடச் சொல்லே.
பிற்காலத்தில் முத்தரையர் என்பது அரசர் அளிக்கும் பட்டப் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது. முத்தரையர் அல்லாதவர்களும் அரசன் அளித்த சிறப்புப் பெயராகப் பூண்டனர். கல்வெட்டுக்கள் இதனை மிகத் தெளிவாகக் குறிக்கின்றன.
புலவர். செ. இராசு
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
நான் 18 பட்டயங்களின் நகல்கள் எடுத்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட எல்லாப் பட்டயமும் கானாடு-கோனாடு சண்டையில் இறந்துபட்டவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. பலபிழைகள் உள்ளன. தமிழ் எண் எழுத்தாகவும், சமஸ்கிருதம் கலந்தும் உள்ளன. பல ஊர்களின் பெயர்கள், ஆலயங்களின் பெயர்கள், வளநாடுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை போன்ற பல பட்டயங்கள் இதுவரை முத்தரைய நாட்டு அம்பலகாரர்களிடம் உள்ளன. ஆலயங்களில் கல்வெட்டாகவும் உள்ளன என்பதைப் பட்டயங்கள் நன்குபுலப்படுகின்றன.
இரா. திருமலைநம்பி திருமலைராய சமுத்திரம் கைக்குறிச்சி 622 303 புதுக்கோட்டை மாவட்டம்
28-10-88 தினமணி தொல்லியல் பகுதி முத்தரையர் கட்டுரையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. "விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுவதால் கங்க அரசர்களே முத்தரசர் என்ற முடிவு கூறப்படுகிறது. தெலுங்குச் சோழர்களின் மிகப்பழைய 6ம் நூற்றாண்டுத் தெலுங்குக் கல்வெட்டுகளில் முதுராஜூ என்ற பெயர்களோடு துகராஜூ, யுவராஜூ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இதனால் முத்தரசு முதுராஜூ என்ற இரு சொற்களின் வழக்கு இச் சொல்லாக்கத்தின் விளக்கத்தில் ஒருபடியாகுமே அன்றி தமிழ்நாட்டு முத்தரையரின் தோற்றத்திற்கு உரிய முடிவாகாது. கங்கரெல்லாம் முத்தரையர் அல்லர். முத்தரையர் என்ற குடிப்பெயர் உடையார் ஒருவரேனும் தன்னைக் கங்கர் என்று கூறிக் கொள்ளவில்லை. மூத்த குடியினர் என்ற பொருள் கங்கர்க்கும், தெலுங்குச் சோழர்க்கும் பொருந்தும். எனினும் தமிழ்நாட்டு முத்தரையர்க்கு எவ்வாறு பொருந்தும் அவர்கள் எந்த முது குடியினர்? தமிழ்நாட்டு முத்தரையர் எவ்வாறு களவரகளவர என்ற பட்டப்பெயர் கொண்டனர்? அவர்களுக்கும் களப்பிரர்க்கும் உள்ள தொடர்பு மற்ற இருவர்க்கும் உண்டா இதுமேலும் ஆய்வுக்குரியது.
கே.ஜி. கிஷ்ணன், மைசூர்
முத்தரையரைப் பற்றிய ஆராய்ச்சி தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை நாகசாமி அவர்கள் வெளிக்கொணர்ந்து வரலாற்றிற்கு ஒரு புதிய ஒளியினை ஏற்படுத்தியுள்ளார். அதற்காகத் தினமணிக்கும், கட்டுரை ஆசிரியருக்கும் முத்தரை சமுதாயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வி. சந்திரசேகரன், சென்னை-17
கட்டுரை முத்தரையரைப் பற்றி சில தெளிவான விளக்கங்கள் தருகின்றது. கன்னடம், மலையாள மொழி இரண்டிலும் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளதை நன்கு விளக்குகின்றது. களப்பிரர்களாகிய முத்தரையர்கள் தமிழர்கள்தாம் என்றும் இவர்கள் கர்நாடகத்தில் தங்கியதால் தமிழும், கன்னடமும் கலந்தன என்று கட்டுரை விளக்குகிறது. இதே போல் தமிழ்ச் சேரர்கள் மலையாளத்தை ஆண்டதனால் மலையாளத்திலும் தமிழ்ச் சொற்கள் வருவதின் காரணமும் நமக்குத் தெரிகின்றது. இக் கட்டுரையினால் முத்தரசர்கள் பல்வேறு இடங்களில் களப்பிரர், கங்கர், விருத்தராஜன், முத்துரசரு என்ற பெயர்களுடன் அழைக்கப்பட்டனர் என்ற கருத்தைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் திரு. நாகசாமி தெளிவாகக் கூறியுள்ளார்.
மு. திருப்பதி, ஆத்திகுளம்.
தினமணி 28-10-88 இதழில் இரா. நாகசாமி அவர்களின் முத்தராயர் கட்டுரை படித்து இன்புற்றேன். முது + அரையர் = முத்தரையர் என்ற விளக்கம் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி (செங்கல் நடுகற்கள் தொடர் எண் 1971/62 தொல் பொருள் ஆய்வுத்துறை வெளியீடு ஆண்டு 1972). மேலும் கடப்பை மாவட்டம் திருப்பலூரைச் சேர்ந்த 7ஆம் நூற்றாண்டைய கல்வெட்டு ஒன்றில் எரிகல் முதிராஜூ புண்யகுமாரன் என்ற ரேணாடுச் சோழ அரசன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். (Annual Report of Epigraphy 283/193738, Archaeological Survey of India). மேலும் அளப்பரிய ஆதிராஜர் என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுவதும் இத்தகைய முதுகுடி அரசர்களையே என்பது தெளிவு. இத்துடன் ஊர்ப் பஞ்சாயத்தில் வழக்கு தீர்க்கும் மூப்பன், மூப்பாடி போன்ற தலைவர்களின் பெயர்களும் எகிப்திய, துருக்கிய கிராம நிர்வாகியின் பெயராகக் குறிப்பிடப்படும் மூதோர் என்ற சொல்லும் ஆராயத்தக்கவை. அரசு என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கு முற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களாக இவற்றைக் கருதலாம்.
எஸ். இராமச்சந்திரன்
தொல்பொருள் ஆய்வுத்துறை, தஞ்சாவூர்.
Posted 21st October 2016 by முத்தரையர்
 
0 Add a comment
OCT
20
அம்பலம் அமரும் கல்


இதுதான் அம்பலக்கல் இதன் பொருள் அம்பலம் அமரும் கல் ஆகும்.
விளக்கம் ;

1)ஒரு ஊரில் முத்தரையர் சமுக மக்கள் வாழும் இடங்களில் ஒரு பொதுவான இடத்தில் ஒரு கூடம் அமைத்து கல்களை போட்டு வைத்திருப்போர்.(கீல் உள்ள படத்தில் உள்ளபடி)
இந்த இடத்தை அம்பலக்கல் என்று அழைப்பர்.இந்த அம்பலக்கல்லில் எதாவது ஊரில் தப்பு நடந்தால் அவர்களை நிக்க வைத்து ஊர் அம்பலம் அல்லது ஊர் சேர்வை அந்த அம்பலக்கல்லில் அமர்ந்து பஞ்சாயத்து செய்வர்.இதுக்குதான் இந்த அம்பலக்கல் ஊருக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

2)வேட்டைக்கு செல்லும் முன்பு இங்கு வந்து அமர்ந்து கலந்து பேசுவர்கள்.பின் வேட்டைக்கு சென்றுவிட்டு இந்த அம்பலக்கலில் வந்து வேட்டையாடிய முயல் மான் போன்றவற்றை பிரித்துக்கொள்வர்.
முக்கிய குறிப்பு:
இந்த அம்பலக்கல்லில் பெண்கள் அமரக்கூடாது.


படத்தில் காட்டப்பட்ட இலவட்டகல் இதை தூக்கினால்தான் பெண்களை திருமனம் செய்யமுடியும்.அந்த கல்லும் அம்பலக்கல் அருகே இருக்கும்.

நடைமுறையில் உள்ள ஊர் புதுகை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்
வலையர்பட்டி,ஆலவயல்,கருப்புக்குடி, போன்ற முக்கிய ஊர்களும் அனைத்து முத்தரையர் மக்கள் வாழும் பகுதி.

நன்றி 
As.கலை அம்பலகாரர்
பொன்னமராவதி
Posted 20th October 2016 by முத்தரையர்
 
0 Add a comment
OCT
20
செல்லமாய் வளர்த்த மாட்டுக்கு சிலைவைத்த அம்பலக்காரர்

போற்றுதலுக்குரிய சாதனைகள் படைத்தவர்களுக்கு சிலைகள் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். போற்றி வளர்த்த மஞ்சுவிரட்டு மாட்டுக்காக ஊர் முகப்பில் சிலை வைத்திருக்கிறார் சிராவயல் அம்பலக்காரர் வெள்ளைச்சாமி.

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளைப் போல சிராவயல் மஞ்சுவிரட்டும் தென்மாவட்டங்களில் பிரபலம். பிள்ளையார்பட்டிக்கு கூப்பிடு தொலைவில் உள்ளது சிராவயல். இங்கு 300 ஆண்டுகளுக்கும் மேலாக தை 3-ம் தேதி மஞ்சுவிரட்டை விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறது சிராவயல் அம்பலக்காரர் குடும்பம். லட்சம் பேருக்கு மேல் கூடும் இந்த மஞ்சுவிரட்டு திருவிழாவுக்கான மொத்த செலவும் அவர்கள் வீட்டுச் செலவு!

இந்த கிராமத்தின் சார்பிலும் ஒரு மஞ்சுவிரட்டு மாடு வளர்க்கிறார்கள். மூன்று மாத கன்றிலிருந்து அம்பலக்காரர் வீட்டில் செல்லமாய் வளரும். வயது தளர்ந்துவிட்டால், அடுத்த கன்றை எடுத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊரில் எல்லோருக்கும் கட்டுப்படும் பரம சாதுவாய் இருக்கும் இந்த மாடு, மஞ்சுவிரட்டு திடலுக்குப் போனால் ‘டெரராகி’விடும். சிராவயல் மாடு இதுவரை யார் கையிலும் சிக்கியதில்லை என்பது மஞ்சுவிரட்டு சரித்திரம்!

இப்போதும் சிராவயலில் ஒரு மஞ்சுவிரட்டு வாரிசு வளர்கிறது. இதற்கு முன்பு இறந்துபோன மாட்டுக்குத்தான் ஊர் முகப்பில் சிலை வைத்திருக்கிறார் அம்பலக்காரர்.

‘‘2008ம் வருஷம் அந்த மாடு இறந்துபோச்சு. அந்த நேரத்துல மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்துல வழக்கு தீவிரமா நடந்துட்டு இருந்துச்சு. இனிமே மஞ்சுவிரட்டே நடத்த முடியாமப் போயிரும்கிற நிலை இருந்துச்சு. அப்பதான் ஊர் முகப்புல, நாங்கள் போற்றி வளர்த்த மஞ்சுவிரட்டு மாட்டுக்கு சிலை வைக்க முடிவெடுத்தோம்.

மஞ்சுவிரட்டு மாடுகளுக்குன்னு ஒரு சக்தி இருக்கு. அதனால, மஞ்சுவிரட்டு மாடுகள் இறந்துட்டா எரிக்கிறதில்ல. காக்கா, கழுகு கொத்தித் தின்னுட்டுப் போகட்டும்னு காட்டுல கொண்டுபோய் போட்டுருவோம். அந்த மாட்டையும் அப்படித்தான் போட்டுருந்தோம். மூணு மாசம் கழிச்சு அதோட மண்டை ஓட்டை எடுத்துட்டு வந்து வைச்சு, இந்த சிலையை அம்சமா வடிவமைச்சோம்’’
மாட்டுச் சிலை மீது கைபோட்டபடி சொன்னார் சிராவயல் அம்பலக்காரர் வெள்ளைச்சாமி.
Posted 20th October 2016 by முத்தரையர்
 
0 Add a comment
OCT
20
முத்தரையர் அடையாளம்
முத்தரையர் தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

முத்தரையரின் தோற்றுவாய்
முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலைக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக் குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர் (அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள்). முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் (பரதவரின்) கிளைக் குடியினராக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.

தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான, விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு (பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிறைந்த அளவு கல்வெட்டுகளும், கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.
🙏🙏🙏🙏🙏
திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்
இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி - எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த குகைக் கோயிலைப் புதுப்பித்து அதன் பராமரிப்பிற்கு நன்கொடைகள் வழங்கிய செய்தியை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்
குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகள் வழங்கிய செய்தி தெரியவருகிறது.

குளமங்கலம் - பெரியகோவில்
இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மிண்ட அய்யனார் ஆலயம் உள்ளது.இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரை சிலை என வர்ணிக்கப்பட்டுள்ளது. 

அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற 33 அடி உயரமுள்ள குதிரைச் சிலையைக் கொண்ட இக்கோயில் 1574-ல் கட்டப்பட்டதாகும். 1937-ல் இத்திருத்தலம் செப்பனிடப்பட்டதை கோயில் வரலாறு தெரிவிக்கிறது. இப்பகுதியில் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது. இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை முத்தரையர் மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழர்களின் கட்டிடக்கலை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியிலும் இருந்து வந்தமைக்கு இக்கோவில் சான்றாக விளங்குகிறது. இப்பகுதி மக்களான முத்தரையர் சமூக மக்களால் முன்மொழியப்படும் பழமை வாய்ந்த ஒரே ஆலயமாக இந்த அய்யனார் ஆலயம் விளங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us