கற்றளிகோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு
Aug 24, 2022
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முத்தரையர் கல்வெட்டு🥰
சோழ மண்டலத்து மாசந்திநாடா[ன]முது[||*]றையன்
🖕இந்த கல்வெட்டு வாசகத்தை முத்தரையன் என்றே எடுத்து கொள்ளவேண்டும்..
முது+(அ)றையன் = முத்தரையன்
மேல் சூடாபுரம் கல்வெட்டுகள் 1.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இதுவரை பதிவாகாத கல்வெட்டு)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பெலத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மேல்சூடாபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் போசள மன்னர் வீரவல்லாளத்தேவருடையதும், சோழரின் மஹாமண்டலேஸ்வரரில் ஒருவனான திரிபுவன மல்ல பூர்வாதிராஜனுடையதுமாக இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.
1. திரிபுவன மல்ல பூர்வாதிராஜனின்
சிலா சாசனம் தரும் செய்திகள்.
இன்று மேல் சூடாபுரம் என்று வழங்கப்படும் இவ்வூரின் பண்டைய பெயர் நிகரிலி சோழ மண்டலத்தில் உள்ள மாசந்திநாட்டில் அடங்கிய முது . றையன் பள்ளி என இக் கோயிலின் ஜகதிப்படையிலுள்ள பூர்வாதிராஜனின் கல்வெட்டினால் அறிய முடிகிறது. இக்கோயிலின் இறைவனின் பெயர் சேவிடை நாயனார். இக்கோயிலின் எதிரில் உள்ள ஏரிக்கு சேவிடைசமுத்திரம் என்பது சாசனம் கூறும் பெயர். இந்த ஏரி ஒருகாலத்தில் இக்கோயிலைச் சுற்றிலும் இருந்துள்ளதை அதன் அடையாளம் கொண்டு காணமுடிகிறது. கோயில் பாறையும் மேடுமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாசனத்தில் சகரையாண்டு குறிப்பிடப்பெற்றுள்ளது.
மஹாமண்டலேஸ்வரன் திரிபுவன மல்ல பூர்வாதிராஜன் தந்த தர்மமான இது, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர் கோட்டத்தின் வெண்புரி ஊரைச் சேர்ந்த காரைக் கிழான் தமயாண்டை என்பவர் கட்டிய நிகரிலிச் சோழ மண்டலத்தில் உள்ள மாசந்திநாட்டின் கீழ் அடங்கிய ஊரான முது (முத்தரையன்) றையன் பள்ளியின் மேற்கில் சேவிடைச் சமுத்திரம் என்ற ஏரிக்கரையின் கீழ் கழனியை கோலால் அளந்து 11 மா அளவில் பிரித்து அதில் 6 குழி அளவிலுள்ள நிலமான கோயில் இறைவனான சேவிடை நாயனாருடையதை நீக்கி, மீதமுள்ள கழனியை மூன்று கூறுகளாக்கி அதை முறையே தென்னன் நீலகண்டருக்கும், சூரியநல்லூரில் உள்ள உடையார் திருவேகம்பமுடையாருக்கும், மீதமிருக்கும் ஒரு கூறை சிவப்பிராமணருக்கும் தானமாக விட்டு, அந்த ஏரிக்கு வடக்கில் உள்ள விச்ச காமுண்டன் பள்ளி ஊரின் நன்செய் புன்செய் நிலங்கள் அனைத்தும் குதிரை ஏறி எல்லை (பரி எல்லை) காணப்பட்டு கோயிலின் இறைவனுக்கு தானமாகப் பூர்வாதிராஜனால் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகங்கள்.
1. ஸ்வஸ்திஸ்ரீ சகரையாண்டு சகார்த்தம் ஆன . . . . . . . . தைம் மாஸத்து . . ஸ்வஸ்திஸ்ரீ மஹாமண்டலேஸ்வரன் திரிபுவன மல்ல பூர்வாதிராஜன் தந்த தர்மத்தாழவாநேன் ஜயங்கொ
2. ண்ட சோழ மண்டலத்து ஆமூர் கோட்டத்து வெண்புரியத்துக் காரை கிழான் தமயாண்டை நிகரிலி சோழ மண்டலத்து மாசந்திநாடா[ன]முது[||*]றையன் பள்ளியில் மேல் கரையி[ல்] கட்டின ஏரி சேவி
3. டைசமுத்திரன் கீழ் கழனியில் மேலைத்தூம்படியிலே யக வு மா கோலால் ௬ க்குழி சேவிடை நாயனார்க்கு நீக்கி நீக்கிநின்ற கழனியானது மூன்று கூறிட்டு . . . . க்குத் தென்னந் நீலகண்டர் சூரியந
4. ல்லூரில் உடையார் திருவேகம்பமுடையார்க்கு வடக்கடைய் இருக்[கும்] மருதன் தெ[πடு]கடைய் ஒரு கூறு பிராஹ்மணர்க்கும் தானமாக விட்டேன் இவ்வேரிக்கு வடக்கில் விச்ச காமுண்டன் பள்ளி நன்செய் புன்செய் னாந் பரி
5. னெல்லையும் இந் நாயனார்க்கு விட்டேன் பூருவாதிராஜனேன்.