ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jan 31, 2023
முத்தரையர் குல மன்னர் பாரி !!!
பறம்பு மலை என்ற பிரான்மலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.
மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி ஆண்டு வாழ்ந்த மலையாகும்.
பிரான்மலை - பாரிமுத்தரையர் நாடு.
இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
"ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.
பாரிவள்ளல் வரலாறு :
பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி (பாரி வள்ளல்) கி.பி 2 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குல வலையோன் தலைவனாக விளங்கிய இவன் ஈகை குணத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னராகவும், தமிழ் வேந்தருள் தனித்தோர் புகழ் கொண்ட வேந்தராகவும் பாரி மன்னன் போற்றப்பட்டான். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். முல்லை செடிக்கு தன் தேரை கொடுத்த கொடை வள்ளல் என்ற புகழுக்கு சொந்தகாரர். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொல்வடை வழக்கில் இருந்து வருகிறது.
வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாக பாரியை தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச் செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலை சிறந்தவராக போற்றப்படுகின்றார்.
இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ் பெற்ற சுந்தரர் – ‘திருத்தொண்டத் தொகை’ என்ற புகழ் பெற்ற பதிகத்தைப் பாடியவர் – பாரியையே கொடைக்கு எல்லையாக சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத் தொகை நூலுள் பல உள்ளன.
பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள். பல காலம் முற்றுகை இட்டும் வெற்றி கிடைக்கவில்லை.
மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க் களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும். அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக் கேட்டார்கள்.
நாங்களும் பலக் காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரி கோட்டைக்குள் இருந்துக் கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக் கேட்டார்கள்.
கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது. வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும், கிழங்குகளும் உள்ளது. மேலும் மூங்கில் நெல் உள்ளது. அவற்றைக் கொண்டே உணவுத் தேவையை சமாளித்துக் கொள்ள முடியும். நீங்கள் ஆண்டுக் கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.
அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக் கேட்டதர்க்கு, போரில் அவரை வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தை கேட்டாலும் கொடுத்து விடுவார். அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப் பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக் கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக் காட்டினார் கபிலர். மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்து விட்டார். இப்போது இருப்பது இந்த மலையும், அரண்மனையும் மட்டுமே என்றார்.
ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப் பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.
மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள், என்னிடம் இருப்பது எதைக் கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும், உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக் கேட்டாலும் எப்படி உயிரைக் கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக் கூடாது என்று வாளை எடுத்து வைத்து விட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.
இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப் பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாள்களை பாரி மீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.
பாரி இறக்கும் தருவாயில் அவரது மகள்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இல்லை எனாது, கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.
பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார்.
(புறநானூறு பாடல் : 113).
புறநானூறு - 113. பறம்பு கண்டு புலம்பல்!
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.
மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.
பொருளுரை:
பறம்பு மலையே! முன்பு, உன்னிடத்துக் கள் நிறைந்த தாழியின் வாய் திறந்தே இருந்தது;
ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்த கறியுடன் கூடிய
கொழுமையான துவையலும் சோறும் குறையாது விரும்பிய
அளவு அளிக்கும் முதிர்ந்த வளமும் இருந்தது.
அவை மட்டுமல்லாமல் எம்மோடு நட்பாகவும் இருந்தாய்.
பெரும் புகழ் பெற்ற பறம்பு மலையே! இப்பொழுது,
பாரி இறந்துவிட்டதால் கலங்கிச் செயலற்று நீர் வடியும்
கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி,
அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வலையல்களை
அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு
உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம்.
இப்பகுதியில் பாரியின் எல்லைக்குட்படட சுற்றுவட்டார ஊர்களில் வாழும் 'மக்கள்' தன் குழந்தைகளுக்கு பாரி, பரிதி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் தன்மரபு பெயர்கள் வைத்துவரும் பழக்கமும் காலங்காலமாக தொன்றுதொட்டு வருகிறது.
வாழ்க முத்தரையர் குல மன்னர் பாரியின் புகழ் !!!