ஆன்மீகம் மற்றும் வரலாறு
Mar 02, 2023
#கண்ணப்ப_நாயனார்_வரலாறு
அழகிய மலர்ச்சோலைகள் சூழ்ந்த மலைவள மிக்கப் #பொத்தப்பி நாட்டிலுள்ள ஓஒரு சிற்றூரே #உடுப்பூர் என்பதாகும். இந்த ஊரைச் சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்த வனப்பகுதியின் தலைவனாக இருந்தவனே வேடர் குலத் தலைவன் #நாகன். அவனது மனைவி #தத்தை என்பவள். மிருகங்களின் தோலையே ஆடையாக உடுத்தியும், மிருகங்களை வேட்டையாடி உண்டும் வாழ்ந்து வேடர்களின் தலைவனாக நாகன் விளங்கினார். இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லை. நாகன் சிவபெருமானை வேண்டி வரவும், அவர் அருளால் பிறவியிலேயே சிவனருளைப் பூரணமாகப் பெற்ற ஒரு மகன் பிறந்தான். அவரே உலகில் சிறந்த வில்லாளியான அர்ஜுனனின் மறுபிறப்பான திண்ணன். அந்தக் குழந்தையை தூக்குவதற்கே சிரமமாகவும், மிகவும் வலிமை உடைய குழந்தையாகவும் பிறவியிலேயே இருந்ததால் அதற்குத் #திண்ணன் என்று பெயரிட்டனர் பெற்றோர்.
வேடர்களின் தலைவனின் மகனல்லவா? மிருகங்களின் உடலிலிருந்த எடுக்கப்பட்ட பற்கள், தந்தங்கள் முதலியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களை அவன் மார்பிலும் இடையிலும் அணிகலன்கலாகப் பூண்டு வளர்ந்தான் திண்ணன்; எந்நேரமும் காட்டுப்பன்றிகளுடனும் காட்டுநாய்களுடனும், பாம்புகளுடனுமே விளையாடி வளர்ந்து வந்தான் *திண்ணன்.
திண்ணனுக்குப் பதினாறு வயதானதும் ஒரு நல்ல நாள் பார்த்து நாகன், அவனுக்கு வேட்டையாடும் கலையைக் கற்றுத்தந்து ஏழு நாள் விழா எடுத்து ஊரார் அனைவரும் கூடியிருக்கப் பிரமாதமாக தன் மகனை வேட்டையாடுதலுக்கு அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் சிறப்பாக. மாமிச உணவோடு விருந்தளித்தான். அன்றிலிருந்து திண்ணனே வேடர்கள் தலைவனானான். சில நாட்களில் நாகனுக்கு வயதானதும் திண்ணன் பொறுப்பெற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது.
அதிகாலையில் சூரியன் எழும் முன் திண்ணன் அம்பும் வில்லுமாக ஒரு மாவீரன் போல் தனது வேட்டைக்கு ப் புறப்பட்டான். அவனுடன் ஏனைய வேடர்களும் சென்றனர். ஏராளமான மிருகங்களைக் கொன்று வீழ்த்தினர். அப்போது ஒரு காட்டுப்பன்றி வேட்டைக்குத் தோண்டியிருந்த குழிகளிலிருந்தும் வேடர்கள் விரித்து வைத்திருந்த வலைகளினின்றும் தப்பியது.
அந்தப் பன்றியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து திண்ணன், நாணன், காடன் என்ற மூவரும் அதைத் துரத்தினர். ஆனாலும் அது அவர்கள் எப்போதும் வேட்டையாடும் காட்டை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்று #திருக்காளஹஸ்தி மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் நின்றது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்கே தலைவனான திண்ணன் வீராவேசத்தோடு முன் சென்று அதைக் கொன்று வீழ்த்தினான்.
அப்போது தான் மற்ற வேடர்களை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர். திண்ணன் அந்தப் பன்றியைக் காடனிடம் கொடுத்து மூவரும் பசியாறுவதற்காகச் சமைக்கச் சொன்னான். காட்டுக்கும் மலைக்கும் அந்தப்பக்கம் "பொன்முகலி" என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர் எடுத்துவருவதற்காக அங்கே சென்றனர்.
தலைவன் ஆன பிறகு தனது கன்னி வேட்டைக்கு(முதல் வேட்டை) வந்த திண்ணன், காட்டைக் கடந்து செல்லும்போது திண்ணன் காளஹஸ்தி மலையைக் கண்டு பரவசப்பட்டு அதனருகே சென்றான். மலையுச்சியில் #குடுமித்தேவர் (#சிவபெருமான்) ஆலயம் இருப்பதாகவும் அவரைத் தரிசிக்கலாமென்றும் நாணன் கூற, அதுவே சிவபெருமானின் அருகே செல்ல திண்ணன் எடுத்த முதலடியாகும்.
முற்பிறவிகளில் நாம் செய்யும் நற்பலன்களின் பேறே இறைவனின்பால் நம்மை ஈர்க்கின்றன. அவ்வாறே மாவீரனாக விளங்கிய அர்ஜுனனின் மறுபிறப்பான திண்ணனுக்கும் இயல்பிலேயே சிவபெருமானின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரிடம் அவன் கொண்ட அளவற்ற அன்பானது பெருவெள்ளமாகப் பொங்கி வளரத் தொடங்கியது. அவனுடைய #தூயஅன்பு அவனை மலையேற வைத்தது. உள்ளம்கவர் கள்வனாகிய சிவபெருமானை அவன் காண்பதற்கு முன் அந்தக் கள்வனே திண்ணனுடைய பிறப்பின் ஆதாரமும் அவனுடைய பிறப்புக்கும் வாழ்க்கைக்குமிடையேயான உறவாகிய வேட்டையெனும் கலையைக் களவாடிவிட்டார்.
திண்ணன் அங்கே ஒர் சிவலிங்கத்தைக் கண்டான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்களினால் பருக, அக்காட்சியின் அருமை அவன் நெஞ்சில் நிரம்பி வழிந்தது. அவன் நினைவு தன் வசமிழந்துப் போயிற்று. அந்த அன்புப் பரவசத்தில் அவனை ஆழ்த்திய சிவபெருமானிடம் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டான்
#காட்டுவேடன்_திண்ணன. அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது; அவன் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் வழிந்தது.
“எம்பெருமானே! இந்த அடர்ந்த காட்டில் கொடிய மிருகங்களுக்கிடையே உன்னைக் காக்க ஆளில்லாமல் இப்படி தனிமையில் இருக்கிறாயே? இது முறையன்று! இது முறையன்று!” என்று கதறினான் தூய உள்ளம் கொண்ட *திண்ணன். முற்பிறவியிலேயே தீவிர சிவ பக்தனாக இருந்து வந்தவன் அல்லவா ? அவனது பூர்வ ஜென்ம தொடர்பால், சிவபெருமானின் மீதிருந்த. அவனது பக்தி மேன்மேலும் பெருவெள்ளமென பெருகியது.
உணர்ச்சி பெருக்கால் தனது வில் கீழே விழுந்தது கூடத் தெரியாமல் யார் இப்படி எம்பெருமானுக்குப் பச்சிலையும் பூக்களுமாக உணவளித்திருப்பார்கள்?” என்று நாணனைக் கேட்டான் *திண்ணன். அதற்கு நாணன், “ஒரு முறை நான் இங்கே வேட்டையாட வந்தபோது ஓர் *அந்தணர் (அந்தச் சிவன் கோயில் பூசாரி) அபிஷேகம் செய்து பூச்சொரிந்ததைக் கண்டேன். அவர் தான் இன்றும் செய்திருக்கவேண்டும்” என்றான்.
திண்ணனுக்குப் பொறுக்கவில்லை. “எம்பெருமான் இப்படித் தனியே இருப்பதா? அவருக்கு மாமிச உணவு, இறைச்சி உணவளிக்க ஆளில்லை! அவரை எப்படித் தனியே விட்டு வருவேன்? என் செய்வேன்? அவருக்குப் பசியாற நல் இறைச்சி கொண்டுவரவேண்டும் நான்!” என்று கூறினான் திண்ணன். எப்பொழுதும் மாமிசங்களையே உண்டு வாழ்ந்து வந்த காட்டு வேடனான திண்ணனுக்கு, சிவபெருமானுக்கு காய்கறிகளையும், பழங்களையும் படைத்து அவரை பசியில் வாட விட்டிருப்பதைப் போல தோன்றியது. எனவே சத்துள்ள மாமிச உணவுகளை பரிமாற வேண்டும்! என்று ஒரு காட்டு வேடனாக சிந்தித்தான் திண்ணன்
எம்பெருமானே! உனக்கு மிகச்சிறந்த இறைச்சி கொண்டுவரப் போகிறேன்!” என்று உறுதிமொழி கூறுவான். மறுகணம், “உன்னைத் தனிமையில் விட்டு எங்ஙனம் செல்வேன்?” என்பான். பின், “ஆனால் நீ மிகுந்த பசியுடனிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லையே… என் செய்வேன்!” என்று புலம்புவான். கடைசியில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அனைத்தும் உடைய சிவபெருமானுக்கு வேண்டியதைக் கொண்டு வந்தே தீரவேண்டுமென்ற ஒரு முடிவோடு சென்றான்.
இவ்வுலகிலுள்ள எல்லாவற்றின் மீதும் உள்ள ஆசைகளனைத்தும் எரிந்துபோய் சிவபெருமானின் மீதுள்ள ஆசை மட்டுமே திண்ணனிடமிருக்கப் #பொன்முகலி_நதிக்கரையிலிருந்த ஓர் அழகிய சோலையை இருவரும் வந்தடைந்தனர். அப்போது காடன் வந்து காட்டுப் பன்றியைச் சமைத்து முடித்த செய்தியைச் சொல்லி மூவரும் உணவருந்தலாமென்று அழைத்தான்.
நாணன் அவனிடம், திண்ணன் சிவபெருமுனைத் தரிசித்தபின் தான் வேடர்களின் தலைவன் என்பதையே மறந்து, சிவபெருமுனின் அடிமையாகவே தன்னை இப்போது கருதுகிறானென்று சொன்னான். அதைக் கேட்டதும் அவனது நண்பன் *நாணன் அதிர்ச்சியடைந்தான்.
திண்ணனோ எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் பன்றிக்கறியின் மிகச்சுவையாக இருக்கக்கூடிய பாகங்களை ஒரு அம்பினால் குத்தியெடுத்துத் தன் வாயிலிட்டுச் சுவைத்துப் பின் அதை வாயினின்றும் வெளியிலெடுத்துத் தான் சுவைத்தவற்றுள் மிகச்சிறந்தவையைத் தனியே சேகரித்தான்.
மற்ற இருவரும், “இவனுக்கு என்னவாயிற்று? இறைச்சியைச் சுவைத்தபின் அதையெடுத்துச் சேகரிக்கிறானே! அவனுக்குக் நிச்சயமாகக் கடும் பசியிருக்கும், ஆனாலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறானே! நமக்கும் உணவளிக்க மாட்டேனென்கிறான்! அவனுடைய தந்தை நாகனையும் மற்றவர்களையும் அழைத்து வந்து என்ன செய்வதென்று பார்ப்போம்” என்று அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.
ஆனால் திண்ணனோ. எந்தச் சலனமுமில்லாமல் இறைச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அபிஷேகம் செய்யச் சிறிது தண்ணீரைத் தன் வாயில் நிரப்பிக்கொண்டு, சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்க அழகிய மலர்கள் சிலவற்றைக் கொய்து தன் தலையில் சூடியெடுத்துக்கொண்டு, மலையுச்சிக்கு விரைந்து சென்றான்.
சுயம்புவாகத் தோன்றிய அந்தச் சிவலிங்கத்தின் தலையிலிருந்த பூக்களைத் தன் செருப்புக் கால்களால் களைந்து வீசித் தன் வாயிலிருந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, தன் தலையில் சூடி வந்த மலர்களால் அலங்கரித்துப் பின் தான் சுவைத்து எடுத்து வந்த இறைச்சியையும் உணவாக அளித்தான். அப்படியும் அவனுக்குச் சமாதானமாகவில்லை. சிவபெருமுனுக்கு மேலும் உணவளிக்க வேண்டுமென்றெண்ணினான்.
சூரியன் அஸ்தமனமாகிப் பொழுது சாய்ந்தது. அச்சமென்றால் என்னவென்றே அறிந்திராத வேடர்கள் தலைவன் திண்ணன், வனவிலங்குகள் இரவில் வந்து சிவபெருமானைத் துன்புறுத்துமோ என்று அஞ்சினான். அதனால் #தன்_வில்லும்_அம்பும் அருகிருக்கச் சிவனாருக்குக் காவலிருந்தான் திண்ணன். மறுநாள் பொழுது புலரும் சமயம் சிவபெருமானை விழுந்து வணங்கிவிட்டு அவருக்கு மீண்டும் உணவளிப்பதற்காக வேட்டையாடக் கிளம்பினான் பக்தியில் முற்றிய திண்ணன்.
திண்ணன் சென்றவுடன் #சிவகோச்சாரியார் என்ற முனிவர் வந்தார். சிவலிங்கத்துக்கு முன் சிதறிக் கிடந்த இறைச்சியையும் எலும்புத் துண்டுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். “இது அந்தப் பொல்லாத வேடர்களின் வேலையகத்தானிருக்கும்” என்று மனம் வருந்தியவாறு. சந்நதியை மிகவும் சிரத்தையாகச் சுத்தம் செய்தபின் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு விரைந்து வந்தார். பின்னர் சிவபெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்து அவருடைய திருநாமங்களை மொழிந்து அந்த ஒப்பிலாப் பரம்பொருளைப் பல முறை விழுந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினார்.
நம் அன்பு வேடன் திண்ணன் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியை தீயில் வேகவைத்தான். சிவபெருமானுக்கு மிகுந்த சுவையுள்ள உணவையே அளிக்கவேண்டுமென்பதால் இறைச்சித் துண்டங்களைச் சுவைத்து அவற்றுள் மிகச்சுவையானவற்றையே தேர்ந்தெடுத்தான். அவற்றை மேலும் சுவையுள்ளவையாக்க அவற்றின் மேல் தேன் வார்த்துக் கொடுத்தான் திண்ணன்.
தினமும் பூசைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பிறப்பிறப்பிலாப் பெருமானை மிகுந்த அன்புடன் வழிபடச் செல்வான். முனிவர் இட்டிருந்த மலர்களை அவன் காலால் அப்புறப்படுத்தி மான்கறி, காட்டுப்பன்றிக்கறி அளிப்பான். இரவு உறக்கத்தை மறந்து சிவனைக் காவல் காப்பதையே கருத்தாகக் கொள்வான். மீண்டும் பகலில் சிவபெருமானுக்கு உணவைத் தேடுவதற்காக வேட்டையாடச் செல்வான்.
இதுவே தினமும் தொடர சிவகோச்சாரியாரோ மிகவும் மனம் வருந்தி இத் தீச்செயலைச் செய்பவனை நீ தான் *அடையாளம் காட்டித்தர வேண்டும் இறைவா! என்று சிவபெருமானிடம் முறையிட்டு புலம்பினார். நாயனாரின் மெய்யான அன்பை விளக்க, சிவகோச்சாரியாரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “அவனை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணாதே! என்னுடைய அன்பே அவனை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அவன் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறான். அவன் குழந்தையைப் போன்ற தூய உள்ளத்துடன் அன்பைப் பொழிபவன். அவன் வாயிலிருந்து என் மேல் பொழியும் எச்சில் நீர் #கங்கையைவிட_புனிதமானது. இவையெல்லாம் அவனுடைய அன்பின் அடையாளம். நாளை அவன் வரும்போது மறைந்திருந்து பார்த்தாயானால் அவனுடைய பக்தியின் மகிமை உனக்குத் தெரியும்!” என்றார் சிவபெருமான்.
அச்சமும் பிரமிப்பும் கலந்த எண்ணங்களோடு *சிவகோச்சாரியார் அன்றிரவு முழுவதும் உறங்க இயலாமல், சூரியன் உதித்தவுடன் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு காளஹஸ்தி ஈசுவரனின் சந்நிதியை அடைந்து மறைவாக இருந்து கவனித்தார். அன்று ஏழாவது நாள்… திண்ணனார் என்றும் போல் அளவிலா அன்புடன் பூசைப் பொருட்களைக் கொண்டுவந்தார். பூசைக்குத் தாமதமாயிற்றே என்றெண்ணிய திண்ணனாருக்குப் போகிற வழியெல்லாம் அபசகுனங்கள் பல தோன்றின.
சிவபெருமானுக்கு ஏதேனும் ஆயிற்றோ என்றஞ்சி விரைந்தோடினார். சிவகோச்சாரியாருக்குத், திண்ணனாரின் அன்பைக் காட்டுவதற்காகச் சிவபெருமான் தனது ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வழியச் செய்தார். அதைக் கண்டு பதைபதைத்த திண்ணன் ஓடிச் சென்று காட்டிலிருந்த மூலிகைகளிலிருந்து சாறெடுத்து சிவபெருமானின் கண்களில் தடவினார் ஆனால் ரத்தம் நிற்கவில்லை. உடனே சட்டென தனது ஒரு
#கண்ணைத்_தோண்டியெடுத்து சிவபெருமானின் இரத்தம் வழியும் கண்ணின் மீது வைத்தார். உடனே இரத்தம் வழிவது நிற்கவும், அவர் பேரானந்தமடைந்து துள்ளிக் குதித்தார்.
ஆனால் சிவபெருமானோ இன்னும் அவனது பக்தியை உலகிற்கு உணர்த்த அவரது #இடது_கண்ணிலிருந்து குருதியை வழியச் செய்தார். சற்றும் தாமதியாமல் முன் போலவே தனது இன்னொரு கண்ணையும் தோண்டப் போனார் திண்ணன். இன்னொரு கண்ணையும் எடுத்து விட்டால் பிறகு தனக்குப் பார்வை தெரியாதே என்றெண்ணி, தனது செருப்பணிந்த #வலதுகாலைத் தூக்கிச் சிவலிங்கத்தின் இரத்தம் வழியும் கண் மீது மிதித்துக் கொண்டார்.
பிறகு அம்பை எடுத்துத் தன் இன்னொரு கண்ணைத் தோண்டப் போனார் திண்ணன். இதைக் கண்டதும் திகிலடைந்தார் சிவகோச்சாரியார். ஆனால் அச் சிவலிங்கத்தில் இருந்து #இடதுகரம்_தோன்றி ( *இடப்பாகம் *உமையவளின்_பாகம் அல்லவா? தாயுள்ளம் சட்டென திண்ணனுக்கு அருளியது எனலாம்) திண்ணனைத் தடுத்து நிறுத்தியது.
சிவபெருமான், திண்ணனுக்குக் காட்சியளித்து #கண்ணப்பா நில்! நில்! என்று அவரது கரத்தைப் பற்றி தடுத்தார். தனது கண்ணையே தோண்டி எடுத்து சிவபெருமானுக்கு அப்பியதால் #கண்ணப்பா ! என்று சிவபெருமானாலேயே அன்போடு அழைக்கப்பட்டார் *திண்ணன்.
அது முதல் அவர் #கண்ணப்ப_நாயனார் ஆனார். கண்ணப்பா! உனது பக்திக்கு எல்லையே இல்லை. " உனது பக்தியை உலகிற்கு காட்டவே யாம் இவ்வாறு செய்தோம்" என்று கூறி அவருக்கு முன்போலவே பார்வையை வழங்கினார் சிவபெருமான். மறைந்திருந்த *சிவகோசரியார் கண்ணப்ப நாயனாரின் பாதத்தில் விழுந்து அவரை வணங்கினார்.
#அர்ஜுனன் #பாசுபதம் வாங்குவதற்காகச் சிவபெருமானை நோக்கி தவம் செய்யும் வேளையில் சிவபெருமான் வேடனாக வந்து அர்ஜுனனோடு சண்டையிட, அவர் சிவபெருமான் என அறியாமல் அவருடனே சண்டையிட்ட அர்ஜுனனின் மறுபிறவியே கண்ணப்ப நாயனார் .
#இன்று_கண்ணப்பநாயனார்_குருபூஜை அவர் அவதரித்தப் புனிதமான தை மாத மிருகசீரிட நட்சத்திரம் இன்று.
இறைவனை வழிபட சாஸ்திரங்களை அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை! உள்ளத்து தூய்மையான பக்தி மட்டுமே போதும்! என்று நிரூபித்த கண்ணப்ப நாயனாரை போல நாமும், சிவபெருமானின் அருளை வேண்டிடுவோம்.
#தூயபக்திக்கு_அடையாளமான #கண்ணப்ப_நாயனாரே_போற்றி🙏
#ஓம்நமசிவாய...🙏 அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி
.