ஆன்மீகம்
Mar 06, 2023
கருப்பசாமியை என்றென்றும் பாடும் உள்ளம்
கண்டடைந்த ஆனந்த இன்பம் கொள்ளும்
கருப்பசாமி நினைத்தாலே மனத்தின் துன்பம்
கருகிட்ட மரம்போல மண்ணில் சாய்யும்
சிந்தையெல்லாம் விரிக்கிறதே சிறகாய் வானில்
சிகரமெல்லாம் தொட்டு வரும் கருப்பனாலே
திறக்காத காட்டுக்குள் போகும் உள்ளம்
திசையெங்கும் கருப்பசாமி அழகை சொல்லும்
கைதொழுத மக்களுக்கு காலம் தோறும்
கருணையொளி வீட்டுக்குள்ளே சுற்று மெங்கும்!
எண்ணத்திலே கருப்பசாமி கொண்ட இன்பம்
எல்லையற்ற வாழ்வுக்கு வழிகள் நல்கும்
கருப்பசாமி உலகமெல்லாம் போற்றி பாட
குலதெய்வம் அறியாதோர் யாரு முண்டோ?
மண்ணினிலே மனிதரிடை பண்பைக் காட்டும்
மனிதநேயம் தர்மம்தான் உலகின் எல்லை
கருப்பசாமி அழகடியான் சிறப்புக் கண்டும்
கள்வர்களும் வாழ்ந்தாலும் பயனொன் றில்லை
அமுதத்தை பொழிகின்ற இதயம் தன்னை
அனுதினமும் தொழுதிடுவோம் உண்மை அன்பால்