ஆன்மீகம்
Apr 30, 2023
அந்தகரணங்கள்:-ஓர் பார்வை
****************************************
1. மனஸ்: 2. புத்தி 3. சித்தம்; 4. அகங்காரம் இவை தமிழில் முறையே 1. மனம்; 2. அறிவு; 3. நினைவு; 4. முனைப்பு என வகுக்கப்பட்டு அகக் கருவிகள் நான்கு என வழங்கப்படும்.
இவற்றின் இயல்புகள்:
******************************
மனம் நினைக்கும் புத்தி நிச்சயிக்கும்; அகங்காரம் கொண்டெழுப்பும்; சித்தம் மூன்றுக்கும் காரணமாக இருக்கும்.
1. மனம் – இது வாயுவின் அம்சமாகையால் தன் சொரூப குணமான நினைப்பு மறப்பு என்னும் சங்கல்ப விகல்பங்களைச் செய்து கொண்டு வாயுவைப் போலவே அலைந்து திரியும். இதற்கு அதிதேவதை-சந்திரன்; ஸ்தானம் – நாபி- (கொப்பூழ் உந்தி)
2. புத்தி – இது தேயுவின் (நெருப்பின்) அம்சமாகையால் பொருட்களின் சுய உருவை நிச்சயிக்கும் உருவ விருத்தியே புத்தியாகும். மேலும் இது செயல்களையும் பொருள் வகைகளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து நிச்சயித்து உணரும். இதற்கு அதிதேவதை – பிரமன், ஸ்தானம் – முகம்.
3. சித்தம் இது அப்புவின் (நீரின்) அம்சமாகையால் பொருளின் நினைப்பே சித்தமாகும். இது பொறிகளுக்கு சலனத்தை விளைவித்து அதன் வழியே விஷயங்களுக்கு இழுத்துச் செல்லும் சித்தமே மனம், இவ்விரண்டும் ஒரே பொருளாக இருப்பதால் இதற்கும் ஸ்தானம் நாபியாகும். இதற்கு அதிதேவதை திருமால்.
4. அகங்காரம் – இது பிருதிவியின் (மண்ணின்) அம்சமாகையால் ஊனுடலை நான் என்று அபிமானிக்கும் விடிவவிருத்தியே அகங்காரமாகும். இது செயல்களை ஆழ்ந்தாலோசிக்காமல் நான் எனது என்று அபிமானித்து முனைப்புக் கொண்டு புண்ணிய பாபங்களைச் செய்து கொண்டிருக்கும். இதற்கு அதிதேவதை – ருத்திரன், ஸ்தானம் – இருதயம்.
இந்நான்கும் உடலில் வியாபித்து ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் அவ்வவ் விருத்திகளில் புகுத்துகின்றன.
தாதுக்கள் 7
***************
1. இரசம்; 2. இரத்தம் (உதிரம்); 3. மாமிசம் 4. மேதஸ்; 5. அஸ்தி 6. மச்சை; 7. ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் ( ஆண் பெண் இன்பச் சுரப்பு) இவை தமிழில் முறையே. 1. சாரம்; 2. செந்நீர், 3. ஊன்; 4. கொழுப்பு; 5. எலும்பு அல்லது என்பு; 6. மூளை; 7. வெண்ணீர் என வழங்கும்.
பஞ்ச கோசங்கள் (ஐவுடம்புகள்)
****************************************
1. அன்மைய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் 5. ஆனந்தமய கோசம் இவை தமிழில் முறையே, 1. உணவுடம்பு அல்லது பருவுடம்பு; 2. காற்று உடம்பு அல்லது வளியுடம்பு; 3. மனவுடம்பு; 4. அறிவுடம்பு 5. இன்ப உடம்பு என வகுக்கப்பட்டு ஐந்து உடம்புகள் என வழங்கப்படும்.
இவற்றின் இயல்புகள்:
ஏழு தாதுக்களால் எடுத்தது அன்னமயகோசமாகும். அன்ன சாரத்தினால் பிராணனும் பலமும் அடங்கியிருப்பது பிராணமய கோசமாகும். பிராண பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனோமய கோசமாகும். அந்த மனதில் (வித்தை) விஞ்ஞானம் தோன்றுவதினால் ஏற்படுவது விஞ்ஞானமய கோசமாகும். அந்த விஞ்ஞானத்தால் (வித்தையால்) ஆனந்தம் தோன்றும் போது ஆனந்தமய கோசமாகும்.
1. அன்னமய கோசம் –
தாய் தந்தையர் அருந்திய அன்னத்தினால் ஆண் பெண் இன்ப உறவு சுரப்பிகளான சுக்கில சோணிதங்கள் உண்டாகி அவற்றால் தாயின் உதிரத்தில் கருத்தரித்து குழந்தை பிறந்து அன்னம் பால் முதலான உணவுகளால் நாள் தோறும் வளர்ந்து தூலமான கை கால்கள் நீண்டு. உடல் அவ்வப்போது மாறுபாடுகள் வளர்ச்சி குன்றல் குறைதல், நலிதல், நசித்தல் முதலான விகாரங்களுக்கு இலக்காகி சப்த தாதுமயமாய் தோன்றும். ஆதலின் இந்த தூலசரீரம் (பருவுடல்) அன்னமய கோசம் என வழங்கப்படுகிறது. இது மரணமடைந்தப் பிறகு அன்னமயமான பிருதிவியில் (மண்ணில்) ஒடுங்கும். இதற்கு இஷ்டமானவை ஜீவாத்ம மனுஷ்யத்வம் முதலான தர்மங்கள்.
2, பிராணமயகோசம் –
வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்தம் என்னும் பஞ்சகர்மேந்திரியங்களும், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் பஞ்ச பிராணன்களும் சேர்ந்தது பிராணமய கோசம், பிராணவாயு முதலான பத்துவித வாயுக்களும் அன்னமய கோசத்தில் சஞ்சரிக்கும்போது பிராணமய கோசத்திற்கும் பரமாத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகும். பரமாத்மாவில் உள்ள சத்து, சித்து, ஆனந்தம் என்னும் குணங்கள் பிராணமய கோசத்தில் உண்டாகியிருப்பதால் மனிதன் பிராணன் உடையவனாகிறான். நான் பசியும் தாபமும், ஆசையும், சாமர்த்தியமும், பலமும், வீரதீரமும் உள்ளவன். நான் வாயாடி, ஊமை, முடவன், குருடன் என்னும் இவை போன்றவை பிராணமய கோசத்தின் குணங்களாகும். இது உடலில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை எங்கும் அந்தரங்கமாய் வியாபித்து கண் முதலான இந்திரியங்களுக்கு பலத்தை உண்டாக்கி அவற்றை நல்வழியிலோ தீய வழியிலோ நடத்திச் செல்கிறது.
3. மனோமய கோசம் –
மனதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் பஞ்சஞானேந்திரியங்களும் சேர்ந்து சப்தம் முதலான விஷயசங்கல்ப தர்மங்களைச் செய்யும் போது மனோமய கோசம் என வழங்கப்படும். இதன் விருப்பம் – சங்கற்பம் முதலான தர்மங்களாகும். ஆத்மா என்னும் சச்சிதானந்தம் மனோமய கோசத்திலும் சேர்ந்திருப்பதால் இந்த மனோமய கோசத்திற்கும் ஆத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகிறது. இது பிராணமய கோசத்திற்கு வேறாக இருந்து காமக்குரோதம் முதலான வியாபாரங்களை உண்டாக்கி, நான் எனது என்னும் விகாரங்களை உடையதாக விளங்குகிறது.
4. விஞ்ஞானமய கோசம் –
புத்தியோடு ஞானேந்திரியங்களான ஐம்பொறிகளும் சேர்ந்து அன்னமய பிராணமய மனோமய கோசங்களோடு கூடி, அந்தக்கரணத்திலுள்ள தியானம் மனம் முதலானவற்றின் விருத்தி எப்போது உண்டாகிறதோ அப்போது விஞ்ஞானமய கோசம் எனப்படும். நான் புத்திசாலி பக்தன், செயலாற்ற வல்லவன், ஆசையற்றவன் என்பன போன்றவையெல்லாம் இந்தக் கோசத்தின் கர்த்துருத்துவாதி குணங்களாகும். மேற்குறிப்பிட்ட பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் என்னும் மூன்று கோசங்களாலும் சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்) நிலைத்து நிற்கும்.
5. ஆனந்தமய கோசம் –
மேற்கூறிய நான்கு கோசங்களும் அஞ்ஞானத்தோடு (அறியாமையோடு) சேர்ந்து நுட்பமான ஆல விதைக்குள் பெரிய ஆலமரம் அடங்கியிருப்பது போல் சொரூப சுகத்தில் தன் காரண ஞானம் அடங்கியிருக்கும் போது ஆனந்தமய கோசம் என வழங்கப்படும். பிரியம், மோதம், பிரமோதம் என்னும் விருத்திகளோடு கூடிய அஞ்ஞானம் முதன்மையாகவுள்ள அந்தக்கரணமாகும். இது பிரியம் என்பது விருப்பமான பொருளைப் பார்த்ததும் உண்டாகும். ஆனந்தம், மோதம் என்பது அப்பொருள் தன் கைக்குக் கிடைத்ததும் உண்டாகும் ஆனந்தம், பிரமோதம் என்பது தன் கைக்குக் கிடைத்த பொருளை தான் அனுபவித்ததும் உண்டாகும் ஆனந்தம். ஆத்மா சச்சிதானந்தத்தோடு இருப்பதால் ஆனந்தம் தோன்றுகிறது. எனவே ஆனந்தமய கோசத்திற்கும் பரமாத்மாவுக்கும் சேர்க்கை உண்டாகிறது.