|

ஆன்மீகம்

May 04, 2023

சிவாயநம.

அங்கயற்கண்ணி மீனாட்சி அம்மை.

பாண்டியநாட்டு மன்னர் மலையத்துவசருக்கு பிள்ளைப்பேறு இல்லை. எனவே தமக்கு பின் மதுரையை ஆட்சிசெய்ய ஒரு வாரிசு இல்லையே என வருத்தம் கொள்கின்றனர். பின்பு  சொக்கநாத பெருமானிடம் மன்னர் மலையத்துவசர் மற்றும் அரசி காஞ்சனமாலை ஆகியோர் பிள்ளைப்பேறு வேண்டுதலை முன்வைக்க மூன்று வயது பெண்குழந்தையாக அங்கயற்கண்ணம்மை முக்கண்ணுடன் அருள் கூர்கிறார்.

மன்னர் அளவற்ற ஆனந்தம் அடைந்தாலும் பிறந்தது பெண்பிள்ளை அதிலும் எம்பெருமான் சொக்கநாதனை போன்றே முக்கண் அமைப்புடன் உள்ளதே என வருத்தமும் கொள்கிறார். குழந்தை தமக்கு கிடைத்த நேரத்தையும் அங்க உருபமைவையும் வைத்து கணிக்கரை கணித்து கூற கட்டளையிடுகிறார்.

கணித்த கணிக்கர் மன்னரிடம் கூறுகிறார். மன்னா தாங்கள் பெண்பிள்ளை கிடைத்ததே என வருந்த வேண்டாம். இந்த குழந்தை உலகன்னை உமையவள் அம்சம். சிவபெருமானுக்கு சொந்தமான சிவலோகம் ஒன்றை தவிர்த்து ஈரேழு உலகையும் வென்று பாண்டியர்களின் கொடியாகிய மீன் கொடியை நாட்டி மீன்கொடியை ஆட்சி கட்டிலில் அமரவைத்து மீனாட்சி என்ற பெயரும் பெறுவார்.இப்போது மீனின் கண் போன்று இமையில்லா கண்களை பெற்றுள்ளமையால் அன்னைக்கு அங்கயற்கண்ணி என திருநாமம் சூட்டுங்கள்.இனி இந்த அன்னையை நாம் பார்த்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அன்னை இரவிலும் உறங்காமல் இந்த மதுரை நகரை காத்தருள்வாள். இந்த நகருக்கும் தூங்காநகரம் என்ற சிறப்பு பெயரும் கிட்டும் என்கிறார் கணிக்கர். மேலும் இந்த அன்னை கயிலைமலையை அடையும்பொழுது தம் மூன்று கண்களில் ஒரு கண் மறைந்துவிடும். அந்த   சிவபெருமானே அன்னையில் அழகில் மயங்கி சிவலோகத்தை விட்டு இம்மதுரைக்கு வந்து அன்னையின் கரம் பிடிப்பார் என்கிறார். அப்படி இந்த மீனாட்சி அன்னையால் நிறைவேற்றப்பட்ட 64 திருவிளையாடல்களே மதுரையில் நடைபெற்ற மீனாட்சி திருவிளையாடல்.

மன்னர் மலையததுவசன் உடல்நலம் இல்லாமல் தவிக்கிறார். அதற்கான காரணம் யாது என சிலரிடம் வினவும்போது இந்திரனுக்கு இந்திரவிழா நடத்தி சிறப்பித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர். மன்னரும் உடனே, அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று நாடாளும் தகுதியுடன் உள்ள அங்கயற்கண் அம்மையை அழைத்து தாம் நோய்வாய் பட்டமையால்  உமது மேற்பார்வையில் இந்திரவிழா எடுத்து சிறப்பிக்க வேண்டுமென தமது விருப்பத்தை முன்வைக்கிறார். உடனே அன்னை நாம் ஏன் இந்திரவிழா நடத்தவேண்டும் என கோபம் கொள்கிறாள் அன்னை.

அதோடு விடாமல் தன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டு ஈரேழு உலகையும் வென்று மீன்கொடி நாட்டுகிறாள்.படை எடுத்ததே தன்னை அழிக்கத்தான் என்பதை அறிந்த இந்திரன் திருக்கயிலை மலையில் ஒளிந்து கொள்கிறான். இந்திரனை தேடி திருக்கயிலை சென்ற அன்னை அந்த மலையை அடைந்ததும் தம் நெற்றிக்கண் மறைந்ததை அறிந்தாள். சிவபெருமானும் திருக்காட்சி தந்தருளி உரியநாளில் மதுரை மாநகருக்கு தாம் வந்து முறைப்படி மணம் முடிப்போம் என்று கூறி அருள்கிறார். அவ்வண்ணமே நேரில் வந்து மீனாட்சி அன்னையின் கரம் பிடிக்கிறார் இறைவன்.
மதுரை மண்ணிற்கும், மண்ணில் வாழும் மக்களுக்கும், மக்களை பெற்ற மீனாட்சி அம்மை மற்றும் சொக்கநாத பெருமான் திருவடிகளுக்கும் வணக்கம்.நன்றி.
சிவாயநம.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us