ஆளப்பிறந்த முத்தரையர்களே
May 27, 2023
திருமங்கை ஆழ்வார் !
திடீரென #திருமங்கை_ஆழ்வார் பற்றி எழுதகாரணமாக அமைந்தது , இன்று படித்த அவரது வாழ்வின் நிகழ்ந்த வரலாற்று செய்தி ஒன்று காரணமாகும் நாகையில் 8 ஆம் நூற்றாண்டில் நிலைபெற்றிருந்த இருந்த புத்தமதத்தின் நாகானை விகாரையில் இருந்து முழுதும் பொன்னால் ஆன புத்தர் சிலையை திருடி அவர் கவர்ந்தாராம் .அதைக்கொண்டு திருவரங்கம் கோயிலுக்கு மதிற்கவர் எடுத்தார். எனும் செய்தியைத் திருமாலிய நூலான 'குருபரம்பரைப் பிரபாவம்' என்னும் நூலே குறித்துள்ளது என்று படித்தேன் அது #நாகப்பட்டினம் எனும் #கோவை_இளஞ்சேரன் என்பர் எழுதி 1996 இல் வெளிவந்த ஒரு நல்ல ஆய்வு நூல் நாகைக்கு வந்த திருமங்கை மன்னன்,
"போதியார் என்றிவர் ஒதும் கள்ள நூல்கள்" என்று பாடியிருக்கிறார்
. புத்தப் பொன்சிலையைப் பார்த்த திருமங்கையாழ்வார் ஒரு பாடலும் பாடியுள்ளார்.என்று சொல்லப்படுகிறது
."ஈயத்தால் ஆகாதோ? இரும்பினால் ஆகாதோ?பூயத்தான் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ?தேயத்தே பித்தளையால் செம்புகளால் ஆகாதோ?மாயப்பொன் வேணுமோ மதித்துன்னைப் பண்ணுதற்கே",
என்று பழித்துப் பாடிய பாடலைத் தனிச் செய்யுட் சிந்தாமணியில் இருப்பதாக அறிகிறோம் அந்தப்பாடல் அவர் பாடியதோ: அன்றோ? யாரறிவார் ?
ஆனால் அப்போது தமிழ் நாட்டில் புதிதாக வந்த புத்தமதம் செல்வாக்காக இருந்ததை அறியமுடிகிறது தமிழ் நாட்டிற்கு வந்த சீன பயணிகள் யுவான் ,இத்சிங் ,ஊசிங் போன்றோர் நாகையில் புத்தர் கோயில்கள் இருந்ததைக் குறிப்பிட்டிருந்தனர்.
சீனப்பயணி யுவான் சுவாங் ( 629-645 ) புத்தம் சரிவடையத்தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார் .ஆனால் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூடாமணி விஹாரம் 15 நூற்றாண்டுவரை நாகையில் நீடித்திருந்ததற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது .
#திருமங்கை_மன்னன் பொன்சிலை கவர்ந்ததை அபிதான சிந்தாமணி (பக்கம் 845) இவ்வாறு சொல் கிறது:
"நாகப்பட்டினத்துப் பெளத்தர் கோயிலில் செல்வமிருக் கின்றதாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்று அதற்குக் காவலாகச் சுழன்று கொண்டிருந்த சக்கரத்தை, வாழை மரத்தைச் சக்கரத்தில் கொடுத்து நிறுத்தி, சுவர்ண பெளத்த விக்ரகத்தை உருக்கித்திருமதில் முதலிய கைங்கர்யம் செய்வித்து". - என்கிறதாம்
.இதுகொண்டுஅங்கிருந்த பொன் புத்தருக்குக் காப்பாக ஒர் ஆழி ( சக்கரம் )சுழன்றதாக அறியமுடிகிறது. அத்தகைய பாதுகாப்பு அந்தக்காலத்தில் இருந்திருக்கிறது என்று அறிய முடிகிறது .அல்லது அப்படி கற்பனையாகபாதுகாப்புக்குறித்து எண்ணும்அறிவு இருந்திருக்கிறது
.வரலாற்றில் நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் #நாகையில்_அசோகன் எடுத்த விகாரையும், பின்னர் எழுந்த நாகானை விகாரையும் பழுதுபட்டு அழிந் திருக்கலாம் பின்னர் 10 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பெற்ற சூளாமணி விகாரையும், #புதுவெளிக்_கோபுரமும் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன. சூளாமணி விகாரையைப் பற்றி இலெய்டன் சிறிய செப்பேடு சிறப்பாக விளக்கியுள்ளது அச்செப்பேட்டில், "உலகத்துக்குத் திலகம் போன்றது" என்றும் "நாகபட்டினத்தில் தன் உயரத்தால் கனக கிரியையும் சிறியதாகச் செய்து, என்றும் அழகினால் வியப்படையச் செய்கின்ற #சூளாமணிவிகாரை" என்றும் விவரிக்கப் பெற்றுள்ளமை இதன் சிறப்பை உணர்த்துகின்றது. -இதற்கு அறக்கட்டளையாக மன்னன் இராசராசனும் பின்னர் இராசேந்திரனும் ஆனைமங்கலம் ஊர் நிலத்தை வழங்கினர், சில ஆண்டுகளே இவ்வறக்கட்டளை செயற்பட்டது
இத்தகு திருமங்கையாழ்வார் வரலாறும் சுவையானது,
அவர் பண்டைய திருமாலிய நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் வயதில் குறைந்தவர் மற்றும் இறுதியானவர்.
சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் ஆலிநாடுடையார்க்கும் அவருடைய மனைவி வல்லித்திரு அம்மைக்கும், (கி.பி. 8-ம் நூற்றாண்டு)
பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்' எனும் நீலன் ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். போர்க்களங்களில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் திருமங்கை" நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.
பகைவர்களுக்குக் காலன் போன்று திகழ்ந்ததால், பரகாலர் என்ற பெயரும் கலியன் எனும் நீலருக்கு உண்டாயிற்று.
தான் விரும்பிய மங்கையை மனம் முடிக்க வேண்டியபோது ,.அந்த குமுதவல்லியார் திருமங்கை மன்னரைப் பார்த்து, ஒரு வருட காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு வைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால், உம்மைப் பதியாக அடைவேன் என்று மொழிந்தாள்.
திருமங்கை மன்னரும் அதற்கு இசைந்து, உறுதிமொழி அளித்தார். ஆதலின் குமுதவல்லியாரும்
அவரை மணம் செய்துகொள்ள இசைந்தார். அதன்பின் குமுதவல்லியாரை அவள் பெற்றோர்
திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.
குமுதவல்லியாரைத் தமது வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட திருமங்கை மன்னரும்,
நாள்தோறும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அன்னமளித்து ஆராதித்தார்இதில் பெரும் செல்வம் செலவானது .மன்னருக்கு செலுத்த வேண்டிய கப்பம் தாமதமாகியது .
கோபம் கொண்ட மன்னன் திருமங்கை மன்னனை சிறையிட்டான் அங்கே உண்ணா நோம்பிருந்த அவரின் கனவில் தோன்றிய திருமால் ,காஞ்சிக்கு வந்தால் அத்தனை செல்வமும் புதையலாகத் தருவேன் என்றுரைத்தார் .மறுநாள் பரகாலரும் மன்னரிடம் காஞ்சிபுரத்தில்பெரும் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்தால்உங்கள் பகுதியைத் தருகிறேன் என்றார்.
அரசரும்இதற்கு உடன்பட்டு, தக்க காவலுடன் பரகாலரை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.அங்கனேமே அங்கு சென்ற திருமங்கையின் மனத்தை மகிழ்விக்க எண்ணிய காஞ்சி பேரருளாளப் பெருமான், அஞ்சாது நீர்அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் என்று புதையல் இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருளினான்.
அங்கே பெரும் செல்வம் இருக்கக் கண்டு, அதை எடுத்து, கப்பம் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அதுபோக மீதி இருந்த பணத்தை வைணவர்களுக்கு உணவளிப்பதற்காக வைத்துக் கொண்டார்.
காலம் விரைவாக சென்றது ,. வைணவர்களுக்குஉணவிடல் குறைவற நடைபெற்று வந்தது. ஆனால், ஆழ்வாரின் கருவூலத்தில் இருந்த திரவியமோ குறைவுற்று வந்தது. ஆழ்வாரிடம் உள்ள பணம் யாவும் செலவழிந்ததும், உணவிடல் தொடர்ந்து நடைபெற என்ன வழி என்று யோசிக்கலானார்
திருமங்கையாழ்வார். வழிப்பறி செய்தேனும் பணம் சேர்த்து வைணவர்களுக்கு உணவளிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அப்படியே தமக்குத் துணையாக இருந்த நால்வரோடு பொருள்
மிகுந்தவரிடமிருந்து வழிப்பறி செய்து பொருள் ஈட்டி, வைணவ அடியார்களுக்கு உணவளிக்கும் செயலை நடத்தி வந்தார்.
இப்படி இருக்கும்போது, ஒருநாள் ஆழ்வார் வழிப்பறி செய்வதற்காக, திருமணங்கொல்லையில் ஓர்
அரச மரத்தில் பதுங்கியிருந்தார். வைணவர்களுக்காகவே வழிப்பறி செய்யும் பரகாலரது
எண்ணத்தை உணர்ந்த பெருமாள், அவ்வழியில் மணமக்கள் கோலம் கொண்டு தேவியுடன், எல்லா
அணிகலன்களையும் அணிந்து கொண்டு, பரிவாரம் புடைசூழ பலவகைத் திரவியங்களுடன் வந்து
கொண்டிருந்தார்.
இக்கூட்டத்தைக் கண்ட ஆழ்வார் மகிழ்ச்சி மிகக் கொண்டார். உருவிய வாளும் கையுமாக, தன் பரிவாரங்களுடன் அவர்களை வளைத்துக் கொண்டார். உள்ளே மணக் கோலத்தில் அமர்ந்திருந்த திவ்விய தம்பதியிடம் இருந்த அணிகலன்களை எல்லாம் கவர்ந்து கொண்டார்.
பின்னர் அப்படிக் கவர்ந்த அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்தார். அந்த
மூட்டையை எடுக்கப் பார்க்க, அவை பெயர்க்கவும் முடியாதபடி கனத்து இருந்தது. அவர் மணவாளனாக வந்த அந்த அந்தணனைப் பார்த்து, நீ மந்திரம் ஏதும் செய்தாயோ? என்று கோபத்துடன் கேட்டார். பிறகு, நீ அந்த மந்திரத்தைச் சொல்லாவிடில், இந்த வாளுக்கு இரையாவாய் என்று தம் கையில் வைத்திருந்த வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்டார்.
மணவாளக் கோலத்திலிருந்த எம்பெருமானும் எட்டு எழுத்தாகி, மூன்று பதமான திருமந்திரத்தை ஆழ்வாரின் வலது திருச் செவியில் உபதேசித்துக் காட்சி கொடுத்தார்.
அவ்வளவுதான்! அதுவரையில் இவருக்கு இருந்த அறியாமை விலகியது. திருமந்திர அர்த்தம்
விளங்கப் பெற்ற ஆழ்வார், தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான
நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும் பெரிய பிராட்டியின் அருளாலே நேரில் கண்டு தரிசித்து உள்ளம் களி கொண்டார்.
இதனால் உண்டான ஞானத்தினாலும், அன்பினாலும் அவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்தார். நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு வேதங்களின் சாரமாகிய நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்கிற நான்கு விதமான கவிகளால் அருளிச்செய்து சிறப்புற்றார். இதனால் பரகாலருக்கு நாலுகவிப் பெருமாள் பட்டப் பெயர் சிறப்புற வழங்கலாயிற்று.
மன்னனாக இருந்து திருமாலிய தொண்டு செய்ய கள்வராகமாறி பின்பு திருமாலினால் ஆட்க்கொள்ளப்பட்டு ஆழ்வார் எனப் போற்றும் வகையில் அவர் ஆண்ட திருத்தலம்தற்போது மங்கைமடம்என்று அழைக்கப்படுகிறது . சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சென்னைக்கு அருகில் உள்ள திருவிடந்தை எனும் வராக சாமிக்கோவிலில் அவர் பாடிய பாடல்கள் கூட சிறப்பானவை .
திருமங்கையாழ்வாரின் முதல் பாசுரம்:
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே !