|

நடுகல் வழிபாட்டில் முத்தரையர்கள்

Jul 15, 2023

*பெரும்பிடுகு பெருந்தேவி அமைத்த சாத்தன் மாறன் நடுகல்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 24 கி.மீ. தொலைவில் வாழைக்குறிச்சி என்ற ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் கல்வெட்டுகள் இவ்வூரை "செம்பியன் வாழைக்குறிச்சி' எனக் கூறுகின்றன. "செம்பியன்' என்பதற்குச் "சோழர்' எனப் பொருள்படும். செம்பியன் வாழைக்குறிச்சி என்றால் சோழன் வாழைக்குறிச்சி எனச் சொல்லலாம்.
 கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட அமைப்புடன் விளங்குகிறது. கோயிலின் கருவறைக்கு மேற்கில் உள்ள இரண்டாம் ராஜராஜன் காலத்திய கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் இருந்தாலும், வாழைக்குறிச்சியில் உள்ள சிவன் "ஈரலூர் ஈஸ்வரமுடையார்' என்று அழைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
 தற்போது "நர்கீஸ்வரர்' என்ற நாமத்தால் அழைக்கப்படுகிறார். இக்கல்வெட்டுகளோடு இரண்டாம் சடையவர்மன் குலசேகர தேவர் காலத்திய கல்வெட்டுகளும் இங்கிருந்தன.
 இந்நிலையில், சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருப்பணியின்போது இக்கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்கள் துண்டு, துண்டாக உடைக்கப்பட்டு பூமிக்குள் இட்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது.
 அந்த அஸ்திவாரத்தின் மீது செங்கற்களால் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கும் செய்யப்பட்டது.
 ஆனால், இக்கோயில் இடிக்கப்படுவதற்கு முன்பாகவே தொல்லியல் துறையினர் வந்து இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகளைப் படியெடுத்ததால் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 இவ்வூரில் ஏற்கெனவே அழிக்கப்பட்ட சிவன் கோயில் கல்வெட்டுகள் பிற்காலச் சோழர், பாண்டியர் காலத்திய கல்வெட்டுகள் என்பது ஊருணியில் கிடந்து எடுக்கப்பட்ட இரண்டு நடுகற்களின் மூலம் தெரியவந்தது.
 அவ்விரண்டு நடுகற்களில் ஒன்று எவ்வித எழுத்துமில்லாத நடு கல்லாகவும், மற்றொன்று மனித உருவமாகவும், உடற்பகுதி சிதைந்த நிலையில், இடது காலுக்கு பக்கத்தில் சுமார் 10 வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் 5, 6 -ஆம் வரிகள் படிக்கக் கூடிய நிலையில் உள்ளன.
 அதில் "சாத்தன், அதி அரைசன் அடியான்கண் போர்ப் புறத்துப் பட்டார்க்குத் தாயார் நாட்டுவித்த கல்' என்ற வாசகம் உள்ளது. சாத்தன் மாறன் என்பவன் முத்தரைய மன்னர்களில் ஒருவன்; இவனது காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்பர்.
 இச்சாத்தன் மாறனின் தாய் பெரும்பிடுகு பெருந்தேவி என்பதை திருமயம் கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
 வாழைக்குறிச்சி ஊருணி நடுகற்கள் மற்றும் ஊருக்குள் உள்ள கல்வெட்டுகளும் இவ்வூர் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும், கி.பி. 8 -ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் இந்த ஊர் வரலாற்றுப் புகழுடனும், செழிப்புடனும் விளங்கியதையும் தெரிவிக்கிறது.
 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.wwwaraiyarsuvaranmaran. com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us