|

ஆதித்த கரிகால்சோழன்

Oct 27, 2023

*"ஆதித்தேசுரம்..."*

முதலாம் ஆதித்தச் சோழன் பிறந்ததினம்
இன்று. 27.09.2023
புரட்டாசி மாத  சதய நட்சத்திரம்.

*பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர் விஜயாலச்சோழர்.*
*பழயாறை என்னும் குறுநிலப்பகுதிக்குள் அடைப்பட்டிருந்த சோழ தேசத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர். தஞ்சையைக் கைப்பற்றி சோழநாட்டின் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர்.*

தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தின் மேல் தனது பயணத்தைத் தொடங்கினார்  விஜயாலரின் மகன் ஆதித்தச் சோழன்.

இவரது காலமான 871-907 

*சோழ தேசத்தின் எல்லைகள் பரந்து பெருகி விரிந்தன. தொண்டை நாடு முழுவதும் சோழ ஆதிக்கத்தின் கீழ் வந்தன.*
*சிற்றரசு நிலையில் இருந்து பேரரசாக சோழம் உருவெடுத்தது.*

மகா கீர்த்தியும் பராக்கிரமும் பெற்ற ஆதித்தச் சோழரின் ஆளுமையின் கீழ் சோழநாடு தனது பழம்பெருமையை மீட்டது..

*காவிரிக்கரையின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்களை கற்றளிகளாக எடுத்து சோழர்களின் சைவ நெறிக்கு சிவாலயங்களாக எடுப்பித்து அடித்தளமிட்டவர் ஆதித்தரே ஆவார்.*

சிவன் கோவில் கொடைகளை பாதுகாப்போரின் பாதங்களை என் தலையில் தாங்குவேன் என்று ஆதித்தனே கூறுகிறார் திருக்கழுக்குன்றம் கல்வெட்டில்..

இவர் எடுப்பித்த சிவாலயங்களில் 60 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இன்றும் கல்வெட்டுத் தரவுகளோடு உள்ளன. 

ஆதித்தர் எடுப்பித்த கோவில்கள் அனைத்தும்  ஆதித்தசோழரின்  கலைப் பாணி  என்று அழைக்கப்பட்டு தனித்துவமான கற்றளிகளாகத் திகழ்கின்றன. 

ஆதித்தன் காலத்திய கற்றளிகள் ஒரு தளம் முதல் நான்கு தளம் அமைந்த விமானம், கீரிவம், சிகரம், தூபி ஆகியவை கொண்டு எண்பட்டையாகவோ, சதுரமாகவோ திகழும். அடித் தளம் குழைவு பெற்றுப் பத்ம பட்டைகளும் யாளிவரிமானங்களும் பெற்று இருக்கும். மூன்று முதல் ஐந்து வரை தேவ கோட்டங்கள் காணப்படும்.

தனித்துவமான ஆதித்தன் கால கற்றளிகள் கலைப்பெட்டகமாக இன்றும் உள்ளன.

விக்கியண்ணன் என்ற ஆதித்தனது படைத்தளபதி ஒருவனுக்கு 
" செம்பியன் தமிழ வேள் "
என்ற பட்டத்தை ஆதித்தர் வழங்கியுள்ளமை ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற தலைவனாக இருந்து பெரும் பராக்கிரமம் கொண்ட மாவீரரான ஆதித்தச்சோழர், தொண்டை நாடு தொண்டமானூற்றூர் என்னும் இடத்தில் சிவபதம் அடைந்தார்.

ஆதித்தச் சோழரின் மகனான பராந்தகன், தனது தந்தை இறந்த இடத்தில் கோதண்டராமேசுவரம் என்னும் ஊரை அமைத்து, ஆதித்தேசுரம் என்ற பெயரில் தனது தந்தைக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை எடுத்தார்.

தனது 34 ஆவது ஆட்சியாண்டான 
கி.பி.941ல் இப்பள்ளிப்படைக் கோவிலை எழுப்பினார்.

இக்கோவிலில் உள்ள மதுரை கொண்ட கோபரகேசரி பராந்தகனின் கல்வெட்டு சிறப்பான வரலாற்றுத்
தகவல்களைச் பதிவு செய்கிறது.

"ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு முப்பத்தினாலாவது திருவேங்கட கோட்டத்து ஆற்றூர்நாட்டு தொண்டைமான் ஆற்றூர் சபையோமும் நகரத்தோமும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தேஸ்வரத்து ஆள்வார்க்குப் புரட்டாசித் திங்கள் திருக்கேட்டை முதல் எதிரெழு நாளும் திருநட்சத்திரமாகிய திருச்சதையத்தன்றுந் திருஉத்ஸவஞ் செய்வதற்கும் போஜனத்துக்கும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் தொண்டைமான் பேராற்றூர் சபையோமும் நகரத்தோமும் வழி சந்திராதித்தவற்குத் தர்மஞ் செய்வதாக எங்கள் வழி வைத்த பொன்....."

என்று தொடங்குகிறது.

ஆதித்தச்சோழரின் பிறந்தநாள் புரட்டாசி மாத சதையம் நட்சத்திரம்.

புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரம் தொடங்கி வரும் 7ம் நாள் ஆதித்தரின் திரு நட்சத்திரமான புரட்டாசி சதையம்.

புரட்டாசி கேட்டை முதல் சதையம் வரை உள்ள 7 நாட்களும்..

ஆதித்தனது பள்ளிப்படைக்கோவில் 
விழாக்கோலம் பூண்டது.

சிறப்பு வழிபாடு, இறைவனுக்கு தனித்துவமான அலங்காரம், ஆயிரம்பேருக்கு அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், என்று ஏழு நாட்களும் களை கட்டும்.

இந்நிகழ்வுகளுக்காக 105 கழஞ்சு பொன்னும், வருடத்திற்கு 4000 காடி நெல்லும் முதலீடாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

நிவந்தப் பட்டியலும் இக்கல்வெட்டில் உள்ளன..

ஆயிரம் பேர் அன்னதானத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, நெய், உப்பு, காய்கள், போன்றவை தேவைப்படும் விபரம். இதற்கான நிவந்தம்.

அடுப்பெரிக்க விறகிடுவான், இலைகொண்டு வருபவர், கலசம் கொண்டு வரும் குசவர், இவர்களுக்கான நிவந்தம்.

சுவாமி அலங்காரத்திற்கு பூமாலை கொண்டு வந்தவர், நீர் கொண்டு வந்தவர்.. இவர்களுக்கான நிவந்தம்.

ஏழாம் நாள்  நடைபெறும் இந்திரவிழாவிற்கான மேடை அமைத்தத் தச்சர்,  கூத்தாடுபவர், பாடல் பாடுபவர்.
இவர்களுக்கான நிவந்தம்.

அனைத்து விபரங்களும் கல்வெட்டில் விரிவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்ட தொல்லியல் சான்றுகளில் முதல் சான்று ஆதித்தனது பள்ளிப்படைக் கல்வெட்டு..

ஏழு நாட்களும்..
திருவிழாக்கள் நடத்தி
ஆடல் ,பாடல், என்று களிப்புற்று தங்கள் தேசத்து தலைவனின் பிறந்தநாள்  நினைவை நினைவு கூர்ந்துள்ளனர்.

ஆதித்தரின் உருவச் சிற்பங்கள் திருக்கருகாவூர், செம்பனார்கோவில், ஆக்கூர், கோவில்களில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் வரையறை செய்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருக் கருக்காவூர் அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் ஆதித்தன் கால கற்றளியாகும். இக்கோயிலின் கருவறை, ஆதித்தன் காலத்திய கலைப்பாணி சற்றும் குன்றாமல் மிளிர்கிறது. இக் கருவறையின் பின்புறத் தேவ கோஷ்டத்தை ஒட்டி இருமருங்கும் இரண்டு உருவச்சிலைகள் உள்ளன. ஒன்றை ஆதித்தனின் உருவச்சிலையாகவும், பிறிதொன்றை அவனது தேவியின் சிலையாகவும் வரலாறு - சிற்ப இயல் வல்லுநர்கள் குறிப்பர். பட்டாபிராமன் அவர்கள் [புதுவை மாநில, பிரஞ்சு இந்தியக்கழகம்) இவ்வுருவச்சிலையை ஆதித்தனின் சிலையாகவே குறிப்பிட்டுள்ளார்.  இச்சிலையை ஒட்டியுள்ள கல்வெட்டொன்று ஆதித்தன் காலத்தியதாகும்.

ஆதித்தரின்
நினைவுகளைப் போற்றுவோம்...🙏🙏🙏முத்தரையர் இலக்கிய வட்டம்,திருச்சி👑👑👑👍


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us