உலக தண்ணீர் தின நாள்
Mar 22, 2024
உலக தண்ணீர் தினம்:
உலகமுழுவதும் பயண்படுத்தும் நீரிற்கு தோற்றுவாய் மழைநீர் என்பதை பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார்.
"வான்முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப்பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல்
நீரினின்று நிலத்து ஏற்வும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்"
புகாரிலிருந்து வரும் பிறநாட்டு கப்பல்கள் ஒருபுறம் ஏற்றுமதி, மறுபுறம் இறக்குமதி செய்வதனை உவமையாக, கடலினின்று வானிற்கு நீர்செல்வதனையும், பின் வானிலிருந்து மீண்டும் ஆறுகளில் தோன்றி கடலினில் கலப்பதனை இலக்கிய சுவைபடகூறுகிறார். இந்நிகழ்வு "நீரியல் சுழற்சி " எனப்படுகிறது. ஆனால் பந்நெடுங்காலமாய் கி.மு7 ம் நூற்றாண்டு முன்புவரை கிரேக்க சிந்தனையாளர்கள் மழையில்லா காலங்களில் ஆற்றுநீர்தரும் ஊற்றுக்கு நீர்கடலிலிருந்து, நிலத்திற்கு அடியில்உள்ள பாறைகளின் வழியாக மலைப்பகுதிக்கு சென்று மலையின் அழுத்தத்தால் மேலெழுந்து ஊற்றுநீராய் வருகிறது என்று நம்பிவந்தனர். கிட்டத்தட்ட கி.மு 2-3 வரையிலும் இவ்வாறே நம்பிவந்தனர்.
ஆனால் இவ்வறிஞர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நம் உருத்திரங்கண்ணனார் மேற்கண்ட பட்டினப்பாலையில் நீரியல் சுழற்சியை தெளிவாக அன்றே விளக்கியுள்ளார்.
இவ்வாறு பழங்காலந்தொட்டே நீரியல் தொடர்பான அறிவு அன்றே நம் தமிழர்களுக்கு இருந்துள்ளது. நமது முன்னோரின் நீரியல் மேலாண்மையில் குறிப்பிடத்தக்கது 'குமிழித்தூம்பு' எனும் மடைத்தொழில்நுட்பம். பெருகிவரும் நீரினை கற்கள் கொண்டு தடுக்கும் வழக்கம் "கற்சிறை" என இலக்கியங்கள் கூறுகிறது. தொல்காப்பிய பொருளதிகாரம் இதனை,
"வருசிறை புனலைக் கற்சிறை போல" எனவும், வீரசோழியம் இதனை,
"வருவிசைப்பு புனலைக் கற்சிறை போல"
எனவும், மதுரைக்காஞ்சி இதனை,
"வருபுனல் கற்சிறை கடுப்ப இடைஅறுத்து ஒன்னார் ஒட்டிய செருப்புகல் மறவர்" எனவும் இலக்கியங்கள் சிறப்பித்து கூறுகிறது!
இக்கூற்றினை நிருபிப்பதாய் சங்ககால சோழன் சேந்தன்,அழிசி வெண்ணாற்றின் இருகரைகளிலும் மதகுஅமைத்து இருபுற மேட்டுப்பகுதிகளையும் பாசனத்திற்கு வசதி அமைத்துக்கொடுத்துள்ளனர். அதனைப்பின்பற்றியே கரிகாலப்பெருவளத்தானும் காவேரிக்கு கரையெழுப்பியும் அணை அமைத்தும் உள்ளார்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து
நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன.
இந்த மதகு அமைப்பே
“குமிழித்தூம்பு’ என்பதாகும்.
பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்கு பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாய் காட்சியளிக்கிறது.
அக்காலத்தில் குடிமராமத்து எனும் முறை பின்பற்றப்பட்டு சீரான இடைவெளியில் வண்டல்மண்ணை அப்புறப்படுத்தி ஏரிகளை ஆழப்படுத்தி நீர்வளத்தினை பேணிக்கித்துள்ளனர். 14-17 ம் நூற்றாண்டு நிலையில்லா அரச சூழல்களில் இந்நுட்பம் மெல்ல மெல்ல பொழிவிழந்து, இதன் சிறப்பை பற்றி அறியாததால் இத்திட்டம் புறக்கணிக்கப்பட்டு. தற்காலத்திய மதகுதிட்டம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது!
மழைநீர் காப்போம்.