காவல் பணியில் முத்தரையர்கள்
Apr 22, 2024
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை கோயில் காவக்காரர்கள்: முத்தரையர் இன மக்கள் தலைமுறை தலைமுறைகளாய் தொடரும் சேவை..,
ரூ.100 சம்பளத்துக்கு பணியாற்றும் குடுமியான்மலை சிகாகிரீஸ்வரர் கோயில் காவல் படை.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வரலாற்று சிறப்புமிக்க அகிலாண்டேஸ்வரி உடனுறை சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. சிசிடிவி கேமரா, போலீஸ் படை என பாதுகாப்புக்கென நவீனம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கையில் மூங்கில் கம்புகளை ஏந்தியபடி இரவு, பகல் பாராமல் கோயிலை காவல் காத்து வருகின்றனர் உள்ளூர் மக்களில் சிலர்.
இன்று நேற்றல்ல, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமுறை தலைமுறையாக இந்தக் காவல் பணியை செய்து வருகின்றனர் என்றால், ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
குடுமியான்மலை சிகாகிரீஸ்வரர் ஆலயத்தை, கோயில் என்பதைவிட அழகிய சிற்பக் கலைக்கூடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏராளமான சிற்பங்களால் வடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம், நூறு கால் மண்டபம், அணியொட்டிக்கால் மண்டபம், நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள், குடவறை கோயில் ஆகியவற்றைக் கொண்டது இந்த ஆலயம்.
இதில், குடவறைக் கோயிலின் தென்பகுதியில் உள்ள கர்னாடக சங்கீத விதிகள் குறித்த கல்வெட்டு இந்தியாவிலேயே இங்குதான் இருக்கின்றன. அப்படியான சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோயிலுக்கு வயது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள். இக்கோயிலில் நடக்கும் பங்குனி மாதத் திருவிழா ரொம்ப விசேஷம்.
இத்தனை சிறப்புமிக்க கோயிலை காவல் காப்பது முக்கியமானது என்பதால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘கோயில் காவக்காரர்கள்’ நியமிக்கப்பட்டனர். 2 ஊர்களைச் சேர்ந்த 12 பேரை பொறுப்பாக நியமிக்க, வழிவழியாக தொன்று தொட்டு இன்றளவும் 12 காவக்காரர்கள் கையில் மூங்கில் கம்பு ஏந்தி கோயிலுக்கு காவலுக்கு நிற்கின்றனர். இவர்களுக்கு கோயில்களைப் பற்றிய தகவல்கள் அத்தனையும் அத்துபடி. அத்தகவல்களை பார்வையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
தங்களது கோயில் காவல் பணி குறித்து உருவம்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் அடைக்கன் கூறும்போது, “குடுமியான்மலை கோயில் அருகே உள்ள உருவம்பட்டி கிராமத்தில் 6 குடும்பம், காட்டுப்பட்டியில் 6 குடும்பம் என 12 குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் வீதம் 12 பேர் கோயிலை காவல் காத்து வருகிறோம். இது எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து வழிவழியாக வருகிறது. இரவு பகலாக காவலுக்கு இருக்கிறோம். பரம்பரையாகவே காவல் காத்து வருவதால் தலா ஒரு ஏக்கர் நிலம் மன்னர்கள் காலத்தில் எங்கள் மூதாதையருக்கு கொடுக்கப்பட்டது. மழை இல்லாததால் அந்த நிலமும் தரிசாகிப் போய்விட்டது. நாள் முழுக்க கோயிலிலேயே கிடக்கும் எங்களுக்கு மாதச் சம்பளம் ரூ.100 மட்டுமே. இதைத் தவிர வேறு எந்த சலுகையும் இல்லை. ஆனால், புகழ் வாய்ந்த இந்தக் கோயிலை பாதுகாப்பதை பாக்கியமாக கருதுகிறோம்” என்றார் அடைக்கன்.
கோயிலில் மேளம் அடிப்பவர், நாதஸ்வரம் ஊதுபவர், சங்கு ஊதுபவர், பூஜகர் என 38 பேர் இருந்தனர். சம்பளம் கட்டுபடியாகாமல் பலர் சென்றுவிட்டனர். இப்போது இருப்பது காவல் காக்கும் 12 பேரும் ஒரு பூஜகர் மட்டுமே. 100 சம்பளம்தான் என்றாலும் உணர்வுப்பூர்வமாக இந்த வேலையை அவர்கள் செய்கின்றனர். தங்களுக்குப் பிறகு இந்த சம்பளத்துக்கு யாரும் காவல் காக்க வருவார்களா என்பதுதான் இவர்களின் இப்போதைய கவலை.
100 ரூபாய்தான் சம்பளம் என்றாலும், அவர்களது அர்ப்பணிப்புமிக்க சேவை விலைமதிக்க முடியாதது. அவர்களது வாழ்வாதாரத்தை காப்பது மட்டுமல்லாமல், 2 ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை தொடரச் செய்யும் நோக்கில், அரசு இவர்களை தக்கவைக்க வேண்டும்.