முத்தரையர் பேரரசு
Apr 24, 2024
முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச மரபுகளில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர்.
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி
தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.[1][2]
7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர், பல்லவர்கள் கீழ் குறுநில மன்னர்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாத ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். வரலாற்றாசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.[3] தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொ.ஊ.பி 850 களில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது விசயாலயச் சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.[4]
முத்தரையர்களுள் நன்கறியப்பட்ட ஆட்சியாளர்கள் முதலாம் குவாவன் (குணமுதிதன்), பெரும்பிடுகு முத்தரையர் (குவாவன் மாறன்), மாறன் பரமேசுவரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) ஆகியோராவர் .[5][6]