ஆன்மீக தொண்டில் முத்தரையர் பேரரசு
May 05, 2024
அழுந்தியூர் குலோத்துங்க சோழ விண்ணகரம்:
திருச்சி -விராலிமலை சாலையில் அமைந்துள்ள ஊர் அழுந்தூர்.அக்காலத்தில் அழிந்தியூர் என அழைக்கப்பட்டுள்ளது. செந்தலை கல்வெட்டில் முத்தரையர் சுவரன் மாறன் வென்றதாய் கூறும் அழிந்தியூர் இவ்வூரே ஆகும். இங்கு வரகுணீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது. இப்பெயரை வைத்து இக்கோவில் இரண்டாம் வரகுணன் கால கோவில் என கருதலாம். அதன்பின்னர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவில் சீரமைக்கப்பட்டது.
இக்கோவிலில் உள்ள குலசேகரபாண்டியரின் 41ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று, இங்கிருந்த சுவடழிந்த குலோத்துங்கசோழ விண்ணகரம் எனும் கோவில் குறித்த குறிப்பொன்றை தருகிறது.
இங்கே படத்தில் காணும் சிலை 9ம் நூற்றாண்டின் ஆரம்பகால சிற்பமைதியில் உள்ளது. இக்கோவில் பின்னர் குலோத்துங்கன் காலத்தில் சீரமைக்கப்பட்டு "குலோத்துங்கசோழ விண்ணகரம்" என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்று இக்கோவிலின் கட்டட அமைப்பு கிடைக்காவிடினும், இப்பெருமாள் சிலை மட்டுமே கிடைத்தது.
இச்சிலை இன்று திருச்சி தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.