|

அழகர் வரலாற்றில் வலையர்

May 07, 2024

அழகர்  மலையானும்,வலையர்  சமுகமும்!

அழகர் கோவில் பகுதியில் பூர்வ குடி மக்களாக வலையர் என்னும் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள்  அழகர் கோவில் பகுதியில் வேட்டையாடுதல்,தேன் எடுத்தல்,விவசாயம் செய்தல், படைத்தளபதி,காவல்காரர் என பல காலமாக காலச்சூழலுக்கு ஏற்ப வாழ்ந்து வந்துள்ளனர்.சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அழகர் கோவில் மலை அடிவாரப்பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவி வந்துள்ளது.அழகர் கோவில் மலையை சுற்றி வலையர் சமூகத்தினரே சிறிய சிறிய கிராமங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கடுமையான பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 
அந்த நேரத்தில் வலையர்கள் வேட்டையாடுதலையும்,தேன் எடுத்தல் கிழங்குகள் எடுத்தும் உணவுண்டு வந்தனர்.ஒரு நாள் அந்த பகுதிக்கு வேட்டுக்குச் சென்ற அழகா என்ற வலையருக்கு விலங்குகள் ஏதும் தென்படவில்லை.
அந்த நேரத்தில் ஒரு வள்ளிக்கிழங்கு செடியை கண்டார்.வள்ளி கிழங்கை கண்டவுடன் பெரும் ஆனந்தம் கொண்டு மண்ணை நோண்ட ஆரம்பித்தார்.கிழங்கு மிகப்பெரிய ஆழத்தில் சென்று கொண்டே இருந்தது.இரண்டு நாட்களுக்கு இந்த வள்ளிக்கிழங்கு நம் பிள்ளைகளுக்கு உணவாகும் என்று ஆனந்தத்தில் தோண்டிக்கொண்டே இருந்தார். கிழங்கியின் அடிப்பகுதியில் செல்லும் பொழுது கடப்பாரகை ஓங்கி குத்தினார் அந்த அழகா வலையர்.வள்ளிக்கிழங்கின் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீச்சு அடித்தது.ரத்தத்தை கண்ட வலையர் ஒன்றும் புரியாமல் என்ன இருக்கிறது என்று நோண்டினார்.பார்த்தால் ஒரு சிற்பத்தின் நெற்றியில் கடப்பாரை குத்தியதில் ரத்தம் வந்துள்ளது.அய்யோ ஏதோ சாமி சிலையை நெற்றியில் குத்திவிட்டேனே என்று அழுது கதறி உள்ளார்.அழுதபடியே மேலும் குழியை நோண்டிக்கொண்டு அந்த சிலையை வெளிய எடுக்க முற்பட்டார். மண்ணுக்குள் புதைந்திருந்த  அழக பெருமான் நெற்றியில் காயத்தோடு  வெளியே வந்தார்.

பெருமாளை வெளியே எடுத்து வைத்துவிட்டு மலையின் அடிவாரத்திற்கு சென்று கிராமத்தில் உள்ள வலையர்களை அழைத்து நடந்ததை கூறினார். அவ்வலையரில் ஒரு சாமியாடிக்கு சாமி வந்தது.பெருமாளுக்கு இவ்விடத்தில் ஒரு கோயில் எழுப்புமாறு சாமி கூறியது.அதற்கு வலையர்கள் நாங்கள் உணவிற்காகவே பஞ்சத்தில் உள்ள நிலையில் எவ்வாறு கோயில் அமைக்க முடியும் என்று கேள்வி கேட்டனர்.அதற்கு சாமி நாடாளும் மன்னனான பாண்டியனிடம் சென்று கோயில் கட்டுமாறு சொல்ல சொன்னது. வலையர்கள் அனைவரும் கூடி மதுரை பாண்டிய மன்னனிடம் சென்று இச்செய்தியை சொன்னனர்.பாண்டிய மன்னன் தனது காவலர்களை அனுப்பி இது உண்மைதானா என்று ஆராயச் செய்தார். காவலர்கள் அழகர்மலைக்கு சென்று நெற்றியில் காயம்பட்டு இருக்கும் அழக பெருமானை கண்டு பரவசம் அடைந்து இந்த செய்தியை அப்படியே பாண்டிய மன்னரிடம் கூறினார்.பாண்டிய மன்னன் இதை நேரடியாக காண்பதற்காக அழகர் மலைப்பகுதிக்கு வந்தார்.பாண்டிய மன்னன்  அழகப் பெருமானை கண்டு வாயடைத்துப் போய் நின்றார் .பின்னர் பாண்டிய மன்னர் இவ்விடத்தில் கோவிலும்,ஒரு கோட்டை அமைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.அவ்விடத்தில் வலையர் ஒருவருக்கு அருள் பிடித்து சாமியாடி அந்த மலைப்பகுதியில் குறுக்கும்,மறுக்குமாக ஓடி வந்தார். அவ்வலையர் குறுக்கும்,மறுக்குமாக மலைப்பகுதியில் சுற்றி வந்த தடத்திலே கோட்டை எழுப்பப்பட்டது.இக்கோட்டை இன்றளவும் ஒரு சீராக இல்லாமல் அதே போல குறுக்கும் மறுக்குமாகவே உள்ளது.பாண்டிய மன்னரும் இப்பகுதியில் கோட்டையும் கோயிலையும் கட்டி எழுப்பினார்.வலையர்கள் ஒன்று கூடி மீண்டும் சாமி அழைத்து ரத்தம் வந்த பகுதியை என்ன செய்வது என்று கேட்டனர் அதற்கு பெருமாளோ அவ்விடத்தில் எமது ரத்தம் தீர்த்தமாக மாற்றி விடுகிறேன் என்றார் அதுவே இன்று தீர்த்தக் கிணறாக மாறியுள்ளது.

அழகர் கோயிலுடன் தொடர்புடைய வலையர்கள் இன்றளவும் பெரும் அளவில் வசித்து வருகின்றனர் அவர்கள் புதுக்கோட்டை,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை,திருச்சி போன்ற மாவட்டங்களில் பெருமளவில் வசிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் அழகர் மலையான், பதினெட்டாம்படி கருப்பரையும் குல தெய்வமாகக் கொண்ட வலையர்கள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது அழகர்கோவில் சென்று வருகின்றனர். அழகர்கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து தற்போது வாழும்  பகுதிகளில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.இவர்கள் குலதெய்வ வழிபாடு பொங்கல் விழா போன்ற நிகழ்வுகளுக்கு முதல் நாள் அழகர் கோவிலுக்கு சென்று தீர்த்தமாடி பதினெட்டாம்படி கருப்பரை வழிபட்டு தீர்த்தங்கள் கொண்டு வந்து கோவில் வீடுகளில் வைத்து வழிபட்ட பிறகே திருவிழாக்கள் தொடங்கப்படுகிறது.

இவர்களின் வகையறாக்கள்:
அழகன்,அழகர்,அழகப்பன்,அழகம்மை, அலங்காரன்,சின்னழகன்,பெரியஅழகன், நல்லழகன்,வலையழகன்,அன்பழகன், அறிவழகன்,சொரியழகன் இதுபோன்று அழகன் என்று முடியும் பெயர்களையும் அழகன் என்ற வகையறாகளை  நூற்றுக்கு 90 சதவீதம் முத்தரையர்கள் வைத்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக வகையறா, கரைகள் என்று கூறப்படும் அனைத்திலும்  இந்த பெயர்கள் உள்ளது.மேலும் இவர்கள்  கருப்பரை கண்டிப்பாக ஒரு காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்பாக அழகர் கோவில் சென்று வழிபட வேண்டும்.திருமணம் முடிந்த பிறகு அழகர் கோவில் சென்று வழிபட வேண்டும்.குழந்தை பிறந்தவுடன் முதல் மொட்டை அழகர் கோவிலில் மொட்டை அடிக்க வேண்டும்.பல ஆண்டுக்கு ஒரு முறையாவது கிடாய் வெட்ட வேண்டும்.மேலும் பொன்னமராவதி பகுதியில் உள்ள வலையர்கள் குலதெய்வ வழிபாட்டில் சாமியாடும் பொழுது தெற்கு திசையை காட்டி மலையை விட்டு  அழகன் வந்து விட்டதாக கூறி சாமி ஆடுவார்கள்.மேலும் பொன்னமராதி பகுதியில் உள்ள வலையர்களில் அழகர் மலையானின் தொடர்பை காண முடிகிறது.பொன்னமராவதி பகுதியில் உள்ள அழகர் சொக்கன்,அழகர் பெருமாள் அய்யனார்,அழகர் காலடி,அழகிய நாச்சி அம்மன்,அழகிய பெருமாள் போன்ற பல்வேறு குல தெய்வ வழிபாடுகளில் இந்த அழகரும் வலையரும் தொடர்பு கொண்டுள்ளனர்.

இவ்வரலாற்று செய்தியை உரிதிபடுத்தும் ஓலைச்சுவடி நமக்கு கிடைத்துள்ளது. மேலும் அழகர் கோவில் உரிமைகள் பற்றிய செப்புபப்பட்டயம் வெள்ளியங்குன்றம் ஜமீனிடம் உள்ளது என்று அழகர் கோவில் மக்கள் கூறுகிறனர்.

அழகர் மலையானும்,வலையர் சமுகத்துக்கும் உள்ள வரலாற்று பதிவுகள் தொடர்ந்து பதிவு செய்வோம்...

நன்றி...

வரலாற்று ஆய்வில்,
  ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர் 
  முத்தரையர் வரலாறு  ஆய்வுக்கூடம்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us