|

திரு நியமம் / நேமம் காளா பிடாரி

May 27, 2024

#சிற்றரசர்_கல்வெட்டுகள்-3

முத்தரையர்

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அந்நாளில் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட செந்தலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் முத்தரையர், முற்காலச்சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நாம் இங்கே முத்தரையர் கல்வெட்டுகளின் செய்திகளைக் காண்போம். கோவில் குறித்து மற்றொரு பகுதியில் விரிவாகக் காண்போம்.

கோவிலின் முன்மண்டபத்திலுள்ள தூண்களில் நான்கு தூண்கள் இக்கோவிலுக்குரியவை அல்ல. அவை  கல்லணை - திருக்காட்டுப்பள்ளி இடையேயுள்ள நியமம் என்ற ஊரிலிருந்த காளாபிடாரிக் கோவிலின் தூண்களாகும். முத்தரைய மன்னன் சுவரன்மாறன் என்னும் பெரும்பிடுகு முத்தரையன் ஆயிரத்தளி எனப்படும் நியமத்திலே காளாபிடாரிக்கு கோயிலொன்று எடுப்பித்தான்.  இன்று கன்னிமார் கோவிலென்றும் பிடாரிக் கோவிலென்றும் ஊர் மக்களால் வழிபடப்படும் வயல்களுக்கிடையே உள்ள சிறிய மேடு தான் அந்நாளில் காளாபிடாரி கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்று இங்கிருந்த கோவிலின் தூண்களைத்தான் இன்று செந்தலை சிவன் கோவில் முன்மண்டபத்திலே காண்கிறோம். இத்தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் சுவரன்மாறன் இப்பிடாரிக்கு கோவில் எழுப்பிய செய்தியும்,  அவரது வெற்றிகளும், அவரின் தந்தை மற்றும் பாட்டன் குறித்த தகவல்களையும் நாமறியலாம். மேலும் இத்தூண்களில் பெரும்பிடுகு முத்தரையனின் விருதுப்பெயரான, ஸ்ரீமாறன், ஸ்ரீசத்ருகேஸரி, ஸ்ரீகள்வர்கள்வன், ஸ்ரீஅதிஸாஹசன் போன்ற பெயர்களும் செய்யுள் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அச்செய்யுள் பாடல்களை,

1.பாச்சிள்வேள் நம்பன்

2.கோட்டாற்று இளம்பெருமானார்

3.கிழார் கூற்றத்து பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங்காஞ்சன்

4.ஆசாரியர் அநிருத்தர்

என்கின்ற நான்கு புலவர்கள் பாடுகின்றனர்.

கோட்டாறாற்றிளம் பெருமானார் பாடிய

"நிற்கின்ற தண்பணைந்தோன்று தஞ்சைத்திறம் பாடிநின்றார்

விற்கின்ற வீரர்கள் ஊர்கின்ற இப்பிணக்குன்றுகள்மேல்

நெற்குன்ற யானை ---------------------"

என்ற பாடலானது மிக ஓங்கிவளர்ந்த மூங்கில் தோன்றும் தஞ்சையின் சிறப்பைப் பாடி நின்ற புலவர்கள் பகைவருடைய பிணங்களை அடுக்கியதால் ஏற்பட்ட குன்றின்மேல், வில்லில் வல்ல வீரர்கள் ஊர்ந்துசெல்லும் நெற்போரைப்போல் காணப்படும்  யானைகளை பரிசு பெறுவர் என்று பொருள் தருகின்றது.

 "பாச்சிள்வேள் நம்பன்" பாடிய

"வஞ்சிப்பூச்சூடிய வாளமருள் வாகைப்பூக்

 குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன்-தஞ்சைக்கோன்

கோளாளி மொய்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்

தோளால் உலகமளிக்கும் தோள்"

இரண்டாவது பாடலானது வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூசூடிய கோமாறனும், தஞ்சைஅரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரை கோபித்து கொன்றளித்தவருமாகிய சுவரன்மாறனின் தோள்களே இவ்வுலகை காக்கும் தோல்கள் என்று பொருள் தருகின்றது. இப்பாடலில் சுவரன் மாறனை  "தஞ்சைகோன்" என்று குறிப்பிடுவது,   விஜயாலயர் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையை கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு வலுசேர்க்கிறது.

அதேபுலவர்,

"சொற்புகு தொண்டை கனிபுகு தூமதி போன்முகத்தாள்

பொற்புக வெற்புப் பகுதிகண்டாய்ப்புக ழிபொருநாதார்

கற்புக விற்புகக் கண்டவன் கள்வர்கள்வன் தஞ்சை

நற்புக ழான்கரம் போற்கொடைக் காலுங் கருமுகிலே"

என்ற பாடலையும் பாடியிருக்கிறார். தலைவியிடத்தே மழைகாலத்தில் திரும்பிவருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் தனக்கு முன்பாக தலைவியிடத்தே செல்லும் கார்மேகத்தைப் பார்த்து, புகழி என்ற ஊரில் பகையரசனை தன் வில்லாற்றலாள் ஓடிஒளியச்செய்த கள்வர்கள்வன் எனும் பட்டமுடையவனும் தஞ்சையை நல்லபடியாக ஆளும் மன்னனாகிய சுவரன்மாறன் கைகளைப்போல் கைமாறு கருதாமல் கொடுக்கும் கார்மேகமே  சந்திரன் போல் பொலிவுடைய என் காதலி உன்வரவு கண்டு கார்காலம் வந்ததும் தலைவன் வரவில்லையே என்று ஏங்கும்படி செய்வது உனக்கு ஏற்றதன்று என்றுரைப்பதாக புலவர் பாடியுள்ளார்.  இதில் தஞ்சைஅரசன் என சுவரன்மாறனை சுட்டிகாட்டுகிறார்.

நான்காவது தூணில் ஆசாரியர் அநிருத்தர் இவ்வாறு பாடுகிறார்,

"மண்டீது கண்டான்தஞ்   சைசெம் புலநாட்டு வெண்கொடல்

விண்டபோது கொண்டாயர் மலையப் புதுமணல்மீது செந்தீத்

தண்டுகண் டாலன்ன கோவங்க ளூர்கின்ற தாழ்புறவே"

பகைவர்களுடைய நாடுகளை அழித்த சுவரன்மாறனின் செம்பூமியாகிய தஞ்சை நாட்டிலே ஆயர்கள் வெண்காந்தள் சூடியதையும், ஆற்றுப்புதுமணலில்  செந்நெருப்புபோல இந்திர கோபப்பூச்சிகள் ஊர்ந்து செல்கின்ற தாழ்ந்த முல்லைநிலப்பகுதியையும் காணலாம் என்பதிதன் பொருள். இப்பாடலில் தஞ்சையை செம்புலநாடென்றும் அது முல்லைநிலப்பகுதியெனவும் குறிக்கிறார். பாச்சிள்வேள் நம்பன் தான் பாடிய பாடலொன்றில் சுவரன்மாறனை "வல்லக்கோன்" என்கிறார்.

இத்தூண்களில் காணப்படுகின்ற கல்வெட்டுகளில்

1.பெரும்பிடுகு முத்தரையனான சுவரன்மாறனின் புகழ்பாடும் சாசனமும்

2.பாண்டியன் மாறஞ்சடையனின் 10 ம் ஆண்டு  (பொயு775) சாசனமும்

3.தெள்ளாறு எறிந்த நந்திபோத்தரையரின் 12ம் ஆண்டு (பொயு838) சாசனமும்

4.ராஜகேசரியின் 18ம்ஆண்டு (பொயு889) சாசனமும்

உள்ளன. இதில் மாறஞ்சடையனின் 775ம் ஆண்டை குறிப்பதால் அக்காலத்திற்கு முன்பே கோவில் எழுப்பியிருக்க வேண்டும். ஒரு கல்வெட்டில் சுவரன்மாறனின் தந்தை, பாட்டனின் பெயர்கள் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளன.

1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்

2.அவனுடைய மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்

3.அவனுடைய மகன் பெரும்பிடுகு முத்தரையனாகிய சுவரன் மாறன்

மேலதிக தகவல்கள் :
1.தென்னிந்திய கல்வெட்டு சாசனம் தொகுதி:5

2.குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சாவூர்

https://yaaooyaakay.blogspot.in/2018/03/3_24.html?m=1


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us