|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

May 31, 2024

தஞ்சைமாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ​ஊர் ராஜகிரி,
இவ்வூரினை இளங்காடு, வாலைவனம், இராஜகிரி மற்றும் வல்லநாடு என்றும் அழைக்கின்றனர்.

வாலை என்றால் இளமை வனம் என்றால் காடு எனவே வாலைவனம் இளங்காடு என்றானது. இதற்குச்சான்றாக இவ்வூரில் சிவன் கோயிலில் இறைவன் திருநாமம் வாலைவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

 இராசகேசரிபுரம் என்பதே  மருவி இராஜகிரி என்றானது, என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.  வருவாய்த்துறை பதிவேடுகளில் இன்றும் இவ்வூர் இராஜகிரி என்றே அழைக்கப்படுகின்றது. இந்த கருத்தை நிரூபிக்கும் வரையில் சமீபத்தில் யாஊயாகே குழுவால்
இளங்காடு ஸ்ரீ வாலவனேஸ்வரர் கோவில் தென்புற கருவறை பட்டிகையில் உத்தமசோழன் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கல்வெட்டிலே முதன்முதலாய் இவ்வூர் இராஜகேசரிபுரம் என அழைக்கப்பட்டதை அறியலாம். சிதைந்து போன இக்கல்வெட்டில் இவ்வூர் எயிற் நாட்டின் கீழ் அன்று வருகிறது. இவ்வூர் இராஜகேசரிபுரம் என உத்தமசோழன் காலம் வரையிலும் அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வாயிலாய் அறியலாம்.

கல்வெட்டு செய்தி:

1.ஸ்வஸ்திஸ்ரீ கொப்பரகெசரி பன்மர்க்கு யாண்டு ஐ...து எயிற்நாட்டு ராஜகேசரிபுரத்து

2.மஹாதேவர்க்கு....

மேலும் இக்கோவிலின் கருவறையின் இடதுபுற நிலைத்தூணில் மூன்றாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு அவரது சிறப்புபெயரான "கோதண்டராமன்" எனும் பெயரில் தொடங்குகிறது. சோழர் காலம் வரையிலும் "இராஜகேசரிபுரம்" என அழைக்கப்பட்ட இவ்வூர் பாண்டியரான சுந்தரபாண்டியன் காலத்தில் "இராஜேந்திரபுரம்" என அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.மேலும் இவ்வூர் இறைவனை தன்னுடைய சிறப்பு பெயரான கோதண்டராமீஸ்வரர் என்றே அழைத்துள்ளார். மேலும் இறைவனின் பூசைக்கும்,ஆவணா அவிட்ட நாளிற்கும் நிவந்தம் அளித்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

கல்வெட்டு:

1 ஸ்வதிஶ்ரீ

2கோநேரி

3மேல்கொ

4ண்டான்

5கோதண்டசீ

6ராமச்சக்கரவர்த்

7த்திக்கு யாண்டு மூன்

8 றாவது நல (நகர)

9ம் இராசெந்திரபுறது

10 உடையாற் 

11கோதண்ட _

12ராமீபவர

13முடையக்க நா

14யனார்க்கு பூசெ

15க்கும் ஆவணி அ

16விட்டம் தீத்தம் ஆ

17க திருநாள் எழு

18ந்தருளி விக்க

19சாத்தமங்கல

இக்கோவிலின் வளாகத்தில் ஆங்காங்கே பிரம்மாண்ட லிங்கங்கள் காணப்படுகிறது, இவற்றிற்கும் ஒரு வரலாறு உண்டு.

நியமத்து ஆயிரத்தளி என சில கல்வெட்டுகள் இவ்வூரின் அருகேயுள்ள நியமம் பகுதியை பற்றி கூறுகின்றது.
ஆயிரத்தளி என்றால்,ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ள கோவில் என கூறலாம். நம் தமிழகத்தில் இரு ஊர்களை மட்டும் ஆயிரத்தளி என பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
ஒன்று நியமத்து ஆயிரத்தளி, மற்றொன்று நந்திபுரத்து ஆயிரத்தளி,
தற்பொழுது இரண்டும் காலப்போக்கில் அழிந்துவிட்டது. இந்த இரு ஊர்களிலும் கொஞ்சம் அலசினால் நிறைய லிங்கங்கள் வயல்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் காட்சியளிக்கும்.
காலப்போக்கில் இவ்வாறு லிங்கம் எடுக்கும் வழக்கம் அழிந்துவிட்டது. அதில் நியமம் பகுதியில் ஆங்காங்கே வயல்வெளிகள் 8 ம் நூற்றாண்டு லிங்கங்கள் பலவற்றை காணலாம். அவற்றில் சில பிரம்மாண்ட லிங்கங்கள் இளங்காடு வாலவனேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

இக்கல்வெட்டினை தொல்லியல்துறையினர் படியெடுத்து சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us