|

வைணவ தொண்டில் முத்தரையர் குல ஆழ்வார்

Jul 05, 2024

கலியனின் காதல்!!! 

பெண்கள்  நினைத்தால், எதையும் அவர்களால் செய்து காட்ட முடியும். அப்படிப்பட்ட  திடமான மனநிலை கொண்டவர்கள்,  எதையுமே சாதித்து காட்டுவார்கள். பலமுறை அவைகள் பொய்த்ததும் இல்லை. 
 
அது போலவே, பெண்களின் காதலும் விசித்திரமானது, ரொம்பவே வலுவானது. எத்தனை யுகங்கள் கடந்தாலும், அவர்களின் காதலை, காதலின் ஆழத்தை, பெண்ணின் மனதினை பகவானாலும் கூட கண்டுபிடிக்க இயலாது. 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, அந்த காலத்தில், எவ்வாறெல்லாம், எப்படியெல்லாம் தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்கள் எனத் தெரியவரும் போது நமக்கே சற்று மலைப்பாகவே  இருக்கிறது.
 
திருக்குரையலூரைச் சேர்ந்த கலியன், படைவீரனாய் இருந்து குறுநில மன்னனாய் மாறினவன். எங்கேயோ சென்று வரும்போது, பெருமாள் கோயிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த  ஒரு பெண்ணை அகஸ்மாத்தாக பார்க்க நேரிடுகிறது. அந்தப் பெண்ணை பார்த்தவுடன், அவனுக்கு அந்தப் பெண்ணை பிடித்து போய் விடுகிறது. கண்டதும் காதல் . கண்ட நாள் முதல், அவனுக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்ததை உணர்கிறான்.  

பார்த்த நாளிலிருந்து, சரிவர உண்ணப் பிடிக்கவில்லை, தூக்கம் வரவில்லை, அவளின்பால் மனம் சென்று விட்டதை கலியன் உணருகிறான். அதன் பின்னர், தொடர்ச்சியாக  பலமுறை பார்க்க முயற்சியும் செய்கிறான் , அவளிடம் பேசவும்  முற்படுகிறான். அது மட்டும் நடக்கவில்லை. எப்படியோ அவள் பெயரை மட்டும், குமுதவல்லி  என்று மட்டும் அறிந்து கொண்டான்.  

அவனுடைய முயற்சிகள் எதுவும் சரிவர நடக்காமல் போகவே, மனதும் ஒருநிலையில் இல்லாது போகவே - ஒரு  திடமான முடிவிற்கு வருகிறான். வெறுமனே பார்ப்பதினால் மட்டும், காதலில் எந்த முன்னேற்றமும் ஆகாது,  எவ்வித பிரயோஜனமும் ஏற்பட போவதும்  இல்லை, எப்படியாவது நம் காதலை வெளிப்படுத்தியே ஆக வேண்டுமென எண்ணிக் கொள்கிறான். இப்படியாக பலநாள் ஓடியது. தனக்கு பிடித்த பெண்ணிடம், காதலை சொல்ல தைரியமும் வேண்டும் என்பதை உணருகிறான்.  

அப்படியாக, தன் காதலை சொல்வதற்கு, அந்த ஒருநாளும் வந்தது. தான் எங்கே முதலில்  சந்தித்தானோ, அதே பெருமாள் கோயில் அருகில், அழகிய நங்கை குமுதவல்லியை சந்திக்கிறான். தன் தைரியத்தை எப்படியோ வரவழைத்துக் கொண்டு தன் காதலை சொல்லி விடுகிறான், மேலும் அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதையும் தெரிவித்து விடுகிறான்.      

பொதுவாக ஆண்கள் தன் காதலை வெளிப்படுத்த நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால், இந்தப் பெண் தன் காதலை நிராகரித்து விடுவாளோ  என்ற பயத்தினால், சற்று நிதானமாக காதலை சொல்வதற்கு  முற்படுவார்கள். அதுவே தான் கலியனின் காதலில் நடக்கிறது.

குமுதவல்லிக்கும் சற்று ஆச்சர்யம். தன் அழகிய கரிய விழிகளால் கலியனை உற்று நோக்கி - வழக்கம் போல் நகைக்கிறாள், ஏதொரு மறுமொழி சொல்லாமல் போய்விடுகிறாள். பல நாட்கள்  குமுதவல்லியிடம் நடையாய் நடந்து தன் காதலை வெளிப்படுத்தி கொண்டேயுள்ளார்.  

அந்த ஒரு நாளும் கலியனின் நாளாக இருந்தது, கலியனின் திடமான, தீவிர காதலைக் கண்டு, திருவாய் மலர்ந்தருளினாள் பெண்மணி, "நான் திருமணம் செய்துகொண்டால் ஒரு தீவிர வைஷ்ணவரை மட்டுமே மணமுடிப்பேன். அதுவும் அவர் எப்படி இருக்க வேண்டுமென்றால்  அனுதினமும் பன்னிரு திருமண் சார்த்திக் கொண்டு, பெருமாளையே நினைத்துக் கொண்டு   பாகவத கைங்கர்யம் செய்கிறவரை  மட்டுமே என்னால் மணக்க இயலும்", என்று சொல்லிவிடுகிறார்.

அதனைக் கேட்ட கலியன், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முற்படுகிறார். காதல் என்றால் சும்மாவா ❤️ குமுதவல்லியின் கட்டளைப்படி, ஒரு வைணவ குருவினை தேடிப் பிடிக்கிறார். குமுதவல்லியின் விருப்பப்படி, பஞ்ச ஸம்ஸ்காரம், அதாவது தாபம், புண்டரம், தாசியநாமம், மந்திரோபதேசம், திருவாராதனம் என்ற ஐவகை ஸம்ஸ்காரங்கள் பெற்றுக்கொள்கிறார்.  தன் இரு தோள்களிலும் திருச்சங்கு - திருச்சக்கரம் இலச்சினை பொருத்திக் கொண்டார்.

அவள் குறிப்பிட்ட பாகவத செயலில் கூட இறங்கிவிடுகிறார். தினமும் திருமால் அடியார்களுக்கு - பாகவாதளுக்கு  அன்னம் இடுவதை செய்யலானார்.  இதனை தான் பாகவத கைங்கர்யம் என்பார்கள். கூடவே, பகவத் கைங்கர்யங்களில் ஈடுபடுவதையும் செய்து வரலானார். அதாவது பெருமாள் சேவைகள். இதனை நோக்கிய  குமுதவல்லி,  கலியனின் தீவிர காதலை பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறார், கலியின் கரம் பிடிக்கிறார். கலியனின் காதல் எவ்வளவு திடமானது ♥️

இருவருமே பகவத், பாகவத   கைங்கர்யம் செய்து வரலாயினர். காலம் செல்லச் செல்ல, கலியன் - தன்னை முழுமையாக வைணவத்தில்  ஈடுபடுத்திக் கொண்டு, தன் அனைத்து அரசாங்க செல்வங்களையும் முழுவதும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறார்.

பாகவத கைங்கர்ய கடமையை நிறைவேற்ற என்னென்னவோ செய்ய முற்படுகிறார். அதில் ஒன்றே யாசகம், அந்த யாசகமும் கைக்கொடுக்கமால்  போகவே வரும் வழிப்போக்கர்களிடம் வழிப்பறி செய்ய ஆயத்தம் ஆகிறார். அப்படி வரும் செல்வத்தில் திருமால்   அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும் வழக்கமாக்கி கொண்டு வந்தார். அதன் கூடவே,  திருவரங்கத் திருக்கோயிலின் மதில் சுவர் அமைக்கும் பணிகளும், பகவத்  கைங்கரியங்களையும் செய்து வந்தார். 

ஓரு நாள் இரவு, தாயாரும் ரங்கனும் கலியனை சோதிக்க, மாற்று உருவத்தில் வழிப் போக்கர்களாய் வந்தனர். கலியன் அவர்களை வழிமறித்து, நகைகளை கழட்டி கொடுக்க சொல்கிறார். பகவானோ, என்னிடம் ஒன்றுமில்லை என சொல்லி, இவரிடம் கேளுங்கள் என்று தாயாரை காண்பிக்கிறார். 

தாயாரோ அனைத்து  நகைகளையும் கழட்டி தருகிறார். கலியனின் கண்களுக்கு தாயாரின் கால் விரல்களில் அணிந்திருந்த அறுகாழி மோதிரம் பளிச்சென தெரிகிறது. அதனையும் கழட்டிக்கொடு தாயாரை வற்புறுத்தவே - தாயாரோ, இதனைக் கழட்டுவது சிரமம் என்கிறார். 

யாருமே எதிர்ப்பாராதது போல், சட்டென மண்டியிட்டு பகவானின் பாதமோ, இல்லை தாயாரின் காலில் உள்ள அறுகாழி மோதிரத்தையோ, தன் வாயினால் கழட்ட முயற்சிக்கும் போது, அவர் எதிரே தாயார், ரங்கனும் தோன்றி, கலியனை ஆட்கொள்கிறார்கள். பகவான் க்ருபை கிட்டியவுடன், அப்போதே பெரிய திருமொழியை அருந்தருளுகிறார், 
 
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடி யிளையவர்த் தம்மோ
டவர்த்தரும் கலவியே கருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்

இந்த கலியனே, பின்னாளில் திருமங்கை ஆழ்வார் என்று திருநாமம் கொண்டு பன்னிரு ஆழ்வார்களில் - அதி முக்கிய ஆழ்வாராக, இன்றும் பரிமளிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us