நடுகல் வழிபாடு
Oct 05, 2024
நடுகல்லிற்கும் இலக்கணம்
பெருந்தெய்வ கோவில்களில் வழிபடும் சிலைகளுக்கு எவ்வாறு சிற்பவியல் இலக்கணம் இருந்ததோ,அதேபோன்று நடுகல்லிற்கும் இலக்கணம் வகுக்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.
பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நடுகற்களில் காணப்படும் வீரர்களைப் பெரும்பாலும், இடக்கையில் வில்லும், வலக்கையில் வாளும் வைத்த நிலையில் காண்கிறோம். இவ்விலக்கணத்தை, 'கூற்றினத்தன்னார் கொடுவில் இடவேந்தி' (வெட்சி செலவு) என்ற வரியாலும், ஒன்வால் வலனேந்தி" (வாகை - மறமுல்லை) என்ற வரியாலும் அறியலாம்.
நடுகற்களில் அவர்கள் உருவம் எவ்வாறு இருந்தன என்பதை,
"காலார் சுழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார்-காலன் கிளர்ந்தாலும் போல்வார் இணைப்பூசம் கேட்டே உளர்த்தார் திரைப் பெயர்வு முண்டு"
வெண்கண்ணியும் கருங்கழலும் செங்கச்சும் தகை புனைந்தன்று
ஆகிய செய்யுளின் மூலம் அறியலாம்.
படத்தில் காணும் இந்நடுகல் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தை பின்பற்றி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
"ஆதன்" என்ற பெயரை,கீழடி தயவால் நிறைய பேர் அறிந்திருப்போம், இதற்கு முன் கொடுமணல் போன்ற அகழாய்வில் கிடைத்த பானைஓடுகளில் கிடைத்தது, தமிழி கல்வெட்டிலும் கூட உண்டு. சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் ஆதன் என்ற பெயர் பயின்று வருகின்றது. அவற்றுள் சில..
1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்
6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்
8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை
சங்ககாலம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் கானங்காடு பகுதியிலுள் 7 ம் நூற்றாண்டு நடுகல் ஒன்றிலும் இப்பெயர் பயின்று வருகின்றது,இதன் வாயிலாக இப்பெயரின் தொன்மை தொடர்ச்சியை அறியமுடிகிறது.
கல்வெட்டு:
1. கோவிசைய மசீந்தி
2. ரபரும(ற்)கு பதி
3.னைந்தாவது
4. மீகொண்
5.றை நாட்ட
6. ரைசரை
7. நின்று
8. ன பூசல்
9. லில் பட்டான்
10. மேலூர் ஆதன்
மீகொன்றை நாட்டில் நடைபெற்ற பூசலில் இறக்கிறார் இந்த "மேலூர் ஆதன்"